உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா!!

உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா!!

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் நேற்று நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள் வருமாறு:-

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி மாற்றமின்றி தொடர்ந்து 7 ஆட்டங்களில் அதே வீரர்களை களம் இறக்கியது ஒரு வகையில் சாதனையாகும். இதற்கு முன்பு நியூசிலாந்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் 6 ஆட்டங்களில் ஒரே மாதிரியான லெவன் அணியை விளையாட வைத்து இருந்தது.

இறுதி ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 29 ரன் எடுத்த போது, ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் திரட்டிய கேப்டனான நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனின் (2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை தகர்த்தார். ரோகித் சர்மா நடப்பு தொடரில் 11 ஆட்டத்தில் ஆடி ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 597 ரன்கள் சேர்த்துள்ளார்.

அரைஇறுதியில் 117 ரன்கள் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி இறுதி ஆட்டத்தில் 54 ரன்கள் எடுத்தார். ஒரு உலகக் கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் 50 ரன்னுக்கு மேல் எடுத்த 7-வது வீரர் கோலி ஆவார்.

ஏற்கனவே மைக் பிரேயர்லி (இங்கிலாந்து, 1979-ம் ஆண்டு), டேவிட் பூன் (ஆஸ்திரேலியா, 1987), ஜாவித் மியாண்டட் (பாகிஸ்தான், 1992), அரவிந்த டி சில்வா (இலங்கை, 1996), கிரான்ட் எலியாட் (நியூசிலாந்து, 2015), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா, 2015) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர். 8-வது வீரராக இந்த பட்டியலில் டிராவிஸ் ஹெட்டும் இணைந்தார்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 11 ஆட்டத்தில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளரான இலங்கை முன்னாள் வீரர் முரளிதரனின் சாதனையை (2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 23 விக்கெட்) சமன் செய்தார்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்று அடித்த 3 சிக்சரையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சிக்சர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர் அடித்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 10 ஓவர்களில் 34 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் அடிக்கப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் 10 ஓவர் முழுமையாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காத ஒரே வீரர் இவர் தான்.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் 5 கேட்ச் பிடித்தார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 5 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை பெற்றார்.

இந்திய வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 3 சதம், 6 அரைசதம் உள்பட 765 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்து விட்டார். இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 50 ரன்னுக்கு மேல் எடுத்ததும் அடங்கும். உலகக் கோப்பையில் 2-வது தடவையாக அவர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.

2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி மொத்தம் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியதே, உலகக் கோப்பை ஒன்றில் ஒரு அணியின் அதிகபட்ச விக்கெட் வேட்டையாக இருந்தது. அச்சாதனையை இந்தியா நேற்று 3-வது விக்கெட் எடுத்த போது முறியடித்தது.

Leave a Reply