நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள்!!

நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள்!!

நீரிழிவு நோயாளிகள் அனைத்து பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களாக இருக்கும்பட்சத்தில் அதனை குறைவாகவே உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் தினமும் 150 கிராம் முதல் 200 கிராம் வரை பழங்கள் சாப்பிடலாம்.

சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் 100 முதல் 150 கிராமுக்குள் பழங்கள் சாப்பிடுவது நல்லது. காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்து பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். பழங்களிலும் இருக்கும் கார்போஹைட்ரேட்டும் உடலில் சேரும் பட்சத்தில் அதன் அளவு அதிகரித்துவிடும்.

எப்போது பழங்கள் சாப்பிடலாம்?

உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ, அல்லது காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடைப்பட்ட நேரத்திலோ பழங்களை சாப்பிடலாம். பழங்களை நன்றாக மென்றுதான் சாப்பிட வேண்டும்.

பழச்சாறு பருகுவதை தவிர்க்க வேண்டும். அவை விரைவாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால் பழமாக உட்கொள்ளும்போது நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும். காலை வேளையில் பழங்கள், நட்ஸ் வகைகளை உட்கொள்ளலாம்.

வெறுமனே பழமாக சாப்பிடாமல் அதனுடன் நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொண்டால் குளுக்கோஸாக மாற்றப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதல் விகிதம் குறையும். பழங்களுடன் பாதாம், புரதம் நிறைந்த உணவுப்பொருட்களையும் உட்கொள்ளலாம். வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து உட்கொள்வதும் நல்லது.

பன்னீர், வேர்க்கடலை போன்றவைகளை எப்போதாவது உட்கொள்வது நல்லது. இப்படி சாப்பிடுவது குளுக்கோஸ் வேகமாக உறிஞ்சப்படுவதை தாமதமாக்கும். பழங்கள் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்.

 1. ஆப்பிள்
 2. கொய்யா
 3. ஆரஞ்சு
 4. பப்பாளி
 5. முலாம் பழம்

இந்த பழங்களில் இயற்கையாகவே கொழுப்பு, கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக இருக்கும். அத்துடன் அனைத்துவகையான ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கும். அதிலும் போலேட், வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமானவை. அவற்றின் தேவையை இந்த பழங்கள் நிவர்த்தி செய்துவிடும்.

 • ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் பொட்டாசியம் இந்த பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
 • செல்கள் வளர்ச்சி அடைதல், பழுதடைந்தால் சீர் செய்தல், காயத்தை குணப்படுத்துதல், பற்கள் மற்றும் ஈறுகளை பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவையான வைட்டமின் சி, கொய்யா மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
 • சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், முலாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் இருந்து ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் போலேட் நிறைந்திருக்கிறது.
 • இந்த பழங்கள் குறைவான கலோரிகளுடன் வயிற்றுக்கு நிறைவான உணர்வை தருகின்றன. இவற்றுள் நார்ச்சத்தும் உள்ளடங்கி இருக்கிறது. உணவு செரிமானமாவதற்கு அது உதவுகிறது. குடல் இயக்கத்தை பராமரிக்கவும் துணைபுரிகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைத்து இதய நோயையும் தடுக்கிறது.

தவிர்க்க வேண்டிய பழங்கள்:

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஐந்து பழங்கள்:

 1. மாம்பழம்
 2. பலாப்பழம்
 3. வாழைப்பழம்
 4. சப்போட்டா
 5. திராட்சை

இந்த பழங்களை சாப்பிட விரும்பினால் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். அதற்கான காரணங்கள்:

 • இந்த பழங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
 • இந்த பழங்களில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் வேண்டுமானால் உட்கொள்ளலாம். இந்த பழங்களின் சீசன் போது அதிகம் உட்கொண்டுவிட்டு நிறைய நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு அதிகரித்து அவதிப்படுகிறார்கள். ஒருவேளை இந்த பழங்களை உட்கொள்ள விரும்பினால் சாப்பிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு குறைவாக உட்கொள்ளலாம். அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கும். மதியம் மற்றும் இரவில் அரிசி உணவு, சப்பாத்தி போன்றவற்றை குறைவாக உட்கொள்வதும் நல்லது.
 • நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கும். எனவே உண்ணும் பழங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பாதிக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். எந்த பழம் ரத்தத்தில் சர்க்கரை அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கவனித்து அதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply