பிரசவித்த பெண்களின் செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்கு உதவும் உணவுகளை பற்றி இங்கே பார்ப்போம்…..

பிரசவித்த பெண்களின் செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்கு உதவும் உணவுகளை பற்றி இங்கே பார்ப்போம்…..

பிரசவத்திற்கு பிறகு கருப்பை சுருங்குவது. குடல் இயக்கம் மற்றும் ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அவற்றில் செரிமானக் கோளாறு முக்கியமானதாகும்.

இதனால் பிரசவித்த பெண்கள் அதிக சோர்வோடும், பலவீனமாகவும் காணப்படுவார்கள். செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்கு உதவும் உணவுகளை பற்றி இங்கே பார்ப்போம்.

சீரகம்:

தைமால் எனும் ரசாயனமும், சில வகை அத்தியாவசிய எண்ணெய்களும் சீரகத்தில் உள்ளன. அவை உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி செரிமானத்தை துரிதப்படுத்துகின்றன. மேலும் இதில் உள்ள இரும்பு, கால்சியம், வைட்டமின் பி. ஆன்டி-ஆக்சிடன்டுகள் போன்ற சத்துக்கள், மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் தடுக்கின்றன.

ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். அடுத்த நாள் காலையில் அதை நன்றாகக் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை மிதமான சூட்டில் குடித்து வந்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

வெந்தயம்:

நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அஜீரணம் மற்றும் வாயுக்கோளாறு உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளை குணப்படுத்தும் பண்புகள் வெந்தயத்தில் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து, மலச் சிக்கலைத் தீர்க்கும். வெந்தயத்தில் வைட்டமின்கள் ஏ.சி.கே.கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம். போலிக் அமிலம் ஆகிய சத்துங்கள் நிறைந்துள்ளன.

இதில் உள்ள மூலக்கூறுகள் வலி நிவாரணியாகவும் செயல்படும். ஒரு மஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும், அடுத்த நாள் காலையில் உணவுக்கு முன்பு அந்த தண்ணீரையும், வெந்தயத்தையும் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

காய்கறிகள்:

பிரசவித்த பெண்கள் உணவில் நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகள், கேரட், முருங்கைக்காய் ஆகியவை உடல் ஆரோக்கியத்தையும், தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கக் கூடியவை.

இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளையும் சீர்படுத்தும். முளை கட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டியாக சமைத்து சாப்பிடலாம். இது தாய்க்கும்.குழந்தைக்கும் தேவையான சரிவிகித சத்துக்கள் கிடைக்க உதவும்.

பூண்டு:

பிரசவித்த பெண்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவற்றுள் ஒன்று பூண்டு. இது தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். செரிமானத்தை துரிதப்படுத்துவதோடு, உடலில் உள்ள கழிவுகளையும் முழுமையாக வெளியேற்றும்.

வெந்நீர்:

சாப்பிட்டவுடன் மிதமான சூடுள்ள தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் செரிமானம் சீராகும். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் தீரும்.

தவிர்க்க வேண்டியவை:

அதிக காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகளையும். காபி, குளிர்பானங்கள் போன்றவற்றையும் பிரசவித்த பெண்கள் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள் செரிமான பிரச்சினைகளை உண்டாக்குவதோடு, மந்தத்தன்மையையும் ஏற்படுத்தும். பால் பொருட்களான தயிர், பன்னீர், சீஸ் போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும்.
….

Leave a Reply