ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது: மரத்தில் ஏறி உயிர் தப்பிய தந்தை-மகன்!!

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது: மரத்தில் ஏறி உயிர் தப்பிய தந்தை-மகன்!!

ஸ்ரீவைகுண்டம்:
வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அதிகனமழை பெய்தது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கிராமத்தை சுற்றிலும் தண்ணீர் நின்றதால் தனித்தீவாக மாறியது. இதனால் கிராம மக்கள் வெளியேற முடியவில்லை.

இதற்கிடையே நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் அவரது மகன் உதயகுமார் ஆகியோர் கோழிப்பண்ணையில் வெள்ளம் சூழ்ந்ததால் அதில் உள்ள கோழிகளை திறந்து விடுவதற்காக சென்றனர். சிறிது நேரத்தில் ஆற்றின் வெள்ளம் அதிகரித்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

இதைத்தொடர்ந்து தர்மலிங்கமும் அவரது மகன் உதயகுமாரும் அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறினர். ஆனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்ததால் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை.

இதனால் அவர்கள் நேற்று காலை முதல் தண்ணீர், உணவு இன்றி விடிய விடிய மரத்திலேயே தவித்தபடி இருந்தனர். கிராம மக்கள் மீட்க முயன்றும் தண்ணீர் அதிக அளவு சென்றால் முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து கிராமத்தை சூழ்ந்த வெள்ள நீரும் வற்ற தொடங்கியது. இதன் பின்னர் இன்று காலை தர்மலிங்கமும் அவரது மகன் உதயகுமாரும் மரத்தில் இருந்து இறங்கி பத்திரமாக திரும்பி வந்தனர்.

மரத்தில் தந்தை-மகன் சிக்கி இருப்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார், வெள்ளமீட்பு குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காலை முதல் தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கிராமத்தை சுற்றிலும் வெள்ள நீர் செல்வதால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்குள்ள பள்ளிக்கூடம், கோவிலில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆழ்வார் திருநகரி பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கின. இங்கும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வீட்டுமாடியில் தஞ்சம் அடைந்து உள்ளனர். ஆழ்வார்திருநகரி-ஆழ்வார்தோப்பு மேம்பாலத்தை மூழ்கடித்து சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது. இன்று காலை வெள்ளம் சற்று குறைந்து உள்ளது. இதேபோல் பால்குளம், கேம்லாபாத், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, ஏரல், குரும்பூர், உமரிக்காடு உள்ளிட்ட கிராமங்களிலும் மழை வெள்ளத்தால் உதவி கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

Leave a Reply