வசூல் வேட்டையில் ஈடுபட்ட ரவுடியை பிடிக்கும்போது ”கீழே விழுந்ததால்” மாவுக்கட்டு போட்டு சிறைக்கனுப்பிய போலீஸ் ….

சென்னை: 

பல்லாவரம் அடுத்த பம்மல் ஈஸ்வர நகர் 10ஆவது தெருவைச்சேர்ந்தவர் மோகன் ராஜ் (24). இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக பம்மல் அனகாபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலுள்ள கடைகளில் கத்தியைக் காட்டி மாமூல் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மோகன்ராஜ் நடந்து செல்பவரிடம் வழிப்பறி செய்தது, கடைகளில் கத்தி காட்டி பணம் கேட்டது மற்றும் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்குச்சென்று வந்ததால் மோகன் ராஜ் கடைக்குச்சென்று கடைக்காரரிடம் மாமூல் கேட்டதும் மாமூலும் கொடுத்துவிடுவார்கள் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் பம்மல் பகுதியில் இயங்கி வரும் மளிகைக்கடையில், ஒன்றில் வழக்கம்போல் கத்தியைக்காட்டி மாமூல் கேட்டதும் கடைக்காரர் தர மறுத்து, உடனே சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் அந்நபரை பிடிக்க முயற்சித்தபோது, அவர் வைத்திருந்த பட்டா கத்தியைக்காட்டி காவல் துறையினரை மிரட்டிவிட்டு தப்பியோட முயற்சித்தார்.

அப்போது, பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர், மோகன்ராஜை மடக்கிப்பிடித்து வாகனத்தில் ஏற்றி, சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்துச்செல்ல முற்பட்டனர். அப்போது வாகனத்திலிருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்றார். அப்போது, சிறு பள்ளத்தில் கீழே விழுந்து மோகன்ராஜுக்கு கைமுறிவு ஏற்பட்டது.

அதன்பின்னர் அவரைப் பிடித்து குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது, போதைக்காக பணம் கேட்டதாக ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply