இன்று பவுர்ணமி தினம்!!

இன்று பவுர்ணமி தினம். இன்று மாலை பெண்கள் தங்களது சகோதரர்களின் வலது கையில் மஞ்சள் கயிற்றை கட்டி விடுவது ரக்சா பந்தனம் என்றும் ராக்கி என்றும் அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணு வாமனராக அவதரித்து மகாபலி சக்ரவர்த்தியை ஆட்கொண்டார். மகாபலியால் அர்ப்பணிக்கப்பட்ட உலகத்தை பாதுகாக்க அங்கேயே தங்கி விட்டார்.

தனது கணவரின் பிரிவைத் தாங்க முடியாத ஸ்ரீமகாலட்சுமியும் சாதாரணப் பெண்ணாக உருவம் தாங்கி ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்றடைந்தார். அப்போது மகாபலி சக்ரவர்த்தியை தனது சகோதரனாக பாவித்து ஸ்ரீமகாலட்சுமி மகாபலிக்கு இந்த நாளில் ரக்சாபந்தனம் செய்வித்ததாக புராணம் கூறுகிறது.

அதையொட்டியே அன்று ஒவ்வொரு பெண்மணியும் மஞ்சள் கயிற்றை தெய்வ சன்னதியில் வைத்து பிரார்த்தித்து கொண்டு அதை எடுத்து தங்கள் சகோதரர்களின் கையில் கட்டுகின்றனர். சகோதரர்கள் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு பெண்கள் ராக்கி கயிறு கட்டுவார்கள்.

ஏ ரக்சை கயிறே, நீ கையில் இருந்து விலகாமல் இருந்து இவரை பாதுகாத்து அருள் செய் என்னும் மந்திரம் சொல்லி பெண்கள் தங்களது உடன் பிறந்த சகோதரர்களுக்கு ரக்சா கயிற்றை கட்டிவிட வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

இந்த ரக்சையை ஏற்றுக் கொள்வதால் அந்த சகோதரன் அந்தப் பெண்ணின் வாழ்க்கை நலத்திற்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன் என்பதை ஏற்றுக் கொள்கிறான். இந்த ரக்சா பந்தனத்தை இன்று (11-ந்தேதி) செய்யலாம். இவ்வாறு ரக்சா கயிற்றை கட்டி விட்ட தனது சகோதரிக்கு சகோதரன் அன்பு பரிசுகளை தாராளமாக தந்து சகோதரியை மகிழ்விக்க வேண்டும்.

ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி

இன்று (வியாழக்கிழமை) ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி தினமாகும். எல்லா வித்தைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த தினம் தான் நாளைய பவுர்ணமி. இன்று (11-ந்தேதி) பூஜை பாராயணம் ஜெபம் போன்ற வற்றால் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை ஆராதிப்பவருக்கு அனைத்து ஞானமும் கிடைக்கும்.

தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான்முகனுக்கு வேதத்தை உபதேசம் செய்தார். அனைத்து கலைகளுக்கும், வித்தைகளுக்கும், மந்திரங்களுக்கும் தலைவராக பிரகாசிக்கும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர். ஸ்ரீமகாலட்சுமியை மடியில் அமர்த்திக்கொண்டிருக்கும் இவரை வணங்குவதால் சிறந்த அறிவு, கல்வியில் நாட்டம், தேர்வில் வெற்றி, செல்வம், புகழ் முதலியவற்றை பெறலாம்.

இன்று ஓணம் தொடக்கம்

வாமன அவதாரம் செய்த ஸ்ரீமகா விஷ்ணு, மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண்ணை தானமாக பெற்று திரிவிக்கிர மூர்த்தியாக உலகளந்தப் பெருமாளாக மாறி தனது காலால் விண்ணையும் மண்ணையும் அளந்து, மூன்றாவது காலடியில் மகாபலியையும் அளந்து ஏற்றுக் கொண்ட நன்னாள் நாடு முழுவதும் ஒணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) இந்த பண்டிகையின் விரதம் தொடங்குகிறது.

வாமன அவதார சரித்திரம் நடந்தது கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள திருக்காகரை என்னும் தலம். இந்த ஊரில் இன்றும் கூட மகாபலியும், அவரது அரண்மனை இருந்த இடமும் அவனை ஆட் கொண்ட பெருமாள் கோவி லும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் திருவோணத் தன்று, தான் ஆண்டு வந்த தேசத்தை காண்பதற்காக கேரள தேசத்துக்கு வருகை புரியும் மகாபலி சக்ரவர்த்தியை கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, வீட்டையும் தெருக்களையும் அலங்கரித்து, பெருமகிழ்ச்சியுடன வரவேற்கும் நாள் தான் ஓணம் பண்டிகை.

இன்று திருவோண விரதம்

ரிக், யஜுர் உபாகர்மா. திருவோண விரதம். பவுர்ணமி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் இத்திருத்தங்களில் தேரோட்டம். சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி- ஸ்ரீ கோமதியம்மன் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆலங்குடி குருபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆடி-26 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை.

திதி : சதுர்த்தசி காலை 10.21 மணி வரை பிறகு பவுர்ணமி

நட்சத்திரம் : உத்திராடம் காலை 7.03 மணி வரை பிறகு திருவோணம் நாளை அதிகாலை 4.31 மணி வரை பிறகு அவிட்டம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

Leave a Reply