சட்டவிரோதமாக செம்மண் எடுத்த செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க கோவை கலெக்டர் பரிந்துரை…

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்த 117 செங்கல் சூளைகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு, ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்துள்ளார்.

கோவை மாவட்டம் சின்ன தடாகம், சோமையம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய 4 கிராமங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 117 செங்கல் சூளைகளுக்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்தாண்டு உத்தரவிட்டது.

இதனை அடுத்து, அனைத்து செங்கல்சூளைகளும் மூடப்பட்டன. இந்த சூழலில், செங்கல்சூளைகளில் செங்கல் உற்பத்திக்காக எடுக்கப்பட்டு, கொட்டிவைக்கப்பட்டு உள்ள மண் அளவினை கணக்கிட்டு செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்துள்ளார்.

சின்ன தடாகம், சோமையம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய 4  ஊட்ராட்சிகளிலும் 1.10 கோடி கன மீட்டர் மண் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக நில உரிமையாளர்களுக்கும், செங்கல்சூளை நிறுவனங்களுக்கும் ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 117 செங்கல் சூளைகளிலும் செங்கல் உற்பத்திக்காக எடுக்கப்பட்டு, கொட்டிவைக்கப்பட்டு உள்ள மண் தொடர்பாக கனிம வளத்துறை, மாசுக்கட்டு வாரியம், வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் செங்கல் செய்வதற்காக தோண்டி எடுக்கப்பட்டு உள்ள மண் தரத்தை ஆய்வு செய்து, அதற்கான மதிப்பீடு குறிப்பிடப்பட்டு அபராதம் விதிக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அபராதம் விதிப்பது தொடர்பாக பசுமை தீர்ப்பாயமே இறுதி செய்யும், என அவர் தெரிவித்தார்.

Leave a Reply