சுதந்திர போராட்டத்தில் அறிந்தும்… அறிந்திராத… தமிழகத்தின் “அழகுமுத்துக்கோன்”

சுதந்திர போராட்டத்தில் அறிந்தும்… அறிந்திராத… தமிழகத்தின் “அழகுமுத்துக்கோன்”

மாவீரன் அழகுமுத்துக்கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்.

இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.

சின்ன அழகுமுத்துக்கோன் 1729-1755

தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் (அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக

முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் மருதநாயகம் பிள்ளை (முகம்மது யூசுப் கானை) அனுப்பி வைத்தது. வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.

வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் சூலை 11ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2012ஆம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. 2015ஆம் ஆண்டு திசம்பர் 26ஆம் நாளன்று இந்திய அரசின் சார்பில் மதுரையில் அழகுமுத்துக்கோன் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.

Leave a Reply