மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் விராட்கோலி – ஜெயவர்த்தனே நம்பிக்கை!!

துபாய்:

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. சமீபகாலமாக அவர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லை.

3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.

33 வயதான விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு இதுவரை சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தது இல்லை. மோசமான ‘பார்ம்’ காரணமாக இந்திய அணி விளையாடிய சில தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

அவரது பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

இதற்கிடையே ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியின் அடிப்படையில் தான் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.

இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலி தற்போது எதிர் கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால் அவர் தரமான ஆட்டக்காரர். அவர் மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர்.

கடந்த காலங்களில் அவர் இது மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்துள்ளார். அதே போல விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கிரிக்கெட்டில் பேட்டிங் நுணக்கம் என்பது தான் நிரந்தரம். பார்ம் வெறும் தற்காலிகமான ஒன்று தான்.

இவ்வாறு ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

விராட் கோலி சர்வதேச போட்டியில் மொத்தம் 23, 726 ரன்கள் (டெஸ்ட் 8074, ஒரு நாள் ஆட்டம் 12,344, 20 ஓவர் போட்டி 3308) எடுத்துள்ளார். 70 சதங்களை (டெஸ்ட் 27+ ஒருநாள் போட்டி 43) அடித்துள்ளார்.

Leave a Reply