கொடுத்த கடனை திருப்பிக்கேட்டவரை அரிவாளுடன் துரத்திச்சென்ற திமுக கவுன்சிலரின் கணவர்…. பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலராக உள்ளவர் நித்யா. இவரது கணவர் வெற்றிச்செல்வன். இவர், அதே கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால் பல ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று குணசேகரன், வெற்றிச்செல்வனின் வீட்டிற்கு சென்று தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது, மதுபோதையிலிருந்த வெற்றிச்செல்வன் ஆத்திரத்தில் குணசேகரனை அவதூறாக பேசியுள்ளார். மேலும், ஆத்திரம் தீராத அவர், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு குணசேகரனை வெட்ட முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் அச்சத்தில் தப்பியோடிய நிலையில், அவரை வெற்றிச்செல்வன் அரிவாளுடன் சாலையில் துரத்திக்கொண்டு ஓடினார். அப்போது, அவரை தடுக்க முயன்ற கிராமத்தினரையும் வெற்றிச்செல்வன் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர்கள், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து குணசேகரன் தரப்பில்  போலீசில் புகார் அளிக்கப்படாத நிலையில், வீடியோ காட்சி அடிப்படையில் சிறுகனுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெற்றிச் செல்வனிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply