வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது….ஐகோர்ட் உத்தரவு… எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இறுகும் பிடி ….

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதையடுத்து எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு கோர்ட் தடை விதிக்க கூடாது என்றும் வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி தரப்பு வாதத்தின் போது, இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். அதே போல, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இறுதி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply