நகைக்கடை மானேஜரிடம் 2 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட மூவர் மீது புகார்….

சென்னை 

தியாகராய நகரில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடையில் மேலாளராக பணியாற்றி வருபவர், சிவகுமார். இவர் தங்கள் நகைக்கடையை திருட்டு வழக்கில் சேர்த்து பெயரைக் கெடுப்போம் என மிரட்டி 2 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாக நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட மூன்று பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிவகுமார் மற்றும் அவரது வழக்கறிஞர், “கடந்த 10 ஆம் தேதி காலை எங்கள் கடைக்கு நுங்கம்பாக்கம் காவல்துறையினர் எனக்கூறி இருவர் வந்தனர்.

அவர்கள், திருட்டு வழக்கில் நேபாள பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுள் சில எங்கள் கடையில் வாங்கியது என்பதால் விசாரணைக்காக காவல் நிலையம் வர வேண்டும் என கூறினார். மேலும் எங்களது தொலைபேசி எண்ணையும் அவர்கள் பெற்றுச் சென்றனர்.

பின்னர் அன்று மாலை எங்களை தொடர்புகொண்டு, இரவு 8 மணிக்கு காவல் நிலையம் வரும்படி கூறினர். அவர்கள் சொன்ன நேரத்திற்கு காவல் நிலையம் சென்றபோது, உதவி ஆணையர் இருக்கிறார். எனவே அவர் சென்ற பிறகு அழைக்கிறோம். நீங்கள் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு தெருவில் காத்திருங்கள் என கூறினர்.

பின்னர் சுமார் 10.30 மணிக்கு உதவி ஆணையர் சென்ற பிறகு, காவல் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள குற்றப்பிரிவு ஆய்வாளர் அறைக்கு வரச் சொன்னார்கள். அங்கிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோகிணி, ‘எங்களால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நேபாள பெண்மணியிடம் உங்கள் கடை நகை உள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் உங்கள் கடை பெயரை சேர்த்து கடைக்கு களங்கம் ஏற்படுத்தாமல் இருக்க, எங்களை கவனிக்க வேண்டும். உங்கள் கடைக்கு காவல்துறையினர் எனக்கூறி வந்த இரு நபர்கள் சொல்லும்படி செய்தால், உங்களுக்கு பிரச்னை வராது’ என கூறினார்.

பின்னர் அவர் காட்டிய இருவரும் காவல் ஆய்வாளருக்கு 1.5 லட்சம் ரூபாயும், எங்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.50,000 என மொத்தம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போது உங்கள் கடை பெயர் இருக்காது என கூறி மிரட்டினர். எங்கள் கடையில் நகை வாங்கும் யாராக இருந்தாலும், எங்கள் நிறுவனத்தின் பெயர் பொறித்த நகையைத் தான் கொடுப்போம்.

இதில் எங்கள் மீது தவறு இல்லை. சம்மந்தப்பட்ட நபர் நகை வாங்கிய தேதியை சொன்னால், அதற்கான ரசீதுகளைக் கூட எடுத்து சமர்பிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியும், அதை பொருட்படுத்தாமல் எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் காவல் ஆய்வாளர் ரோகிணி உள்ளிட்ட மூன்று பேர் மிரட்டல் விடுத்தனர்.

மேலும் கடைக்கு வந்த இரு நபர்களின் சிசிடிவி பதிவுகள் மற்றும் தொலைபேசியில் பேசிய ஆடியோ பதிவுகளுடன், சம்மந்தப்பட்ட நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி உள்ளிட்ட மூன்று பேர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்” என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction