புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பாலாலயம்!!

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து பேரானந்தம் அடைவார்கள்.

இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகமும், அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்தது. முதல்கட்டமாக மூலவர் கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்றுமுன்தினம் பாலாலய பூஜைகள் தொடங்கியது. நேற்றுகாலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ராஜகோபுரம், பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து கோபுரங்கள், மண்டபங்கள், தரைதளம் உள்ளட்ட கோவிலின் பல்வேறு இடங்களில் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது. சாமிகளுக்கு பாலாலயம் செய்யப்படாததால் மகாமாரியம்மன் உள்ளிட்ட அனைத்து சாமிகளையும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம் என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply