இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க தடை விதித்தது பிசிசிஐ!!
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ.) கொண்டு வரப்பட்ட இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இதனால் இந்த போட்டிக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.
இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் ‘லீக்’ போட்டியை போல வெளிநாடுகளில் 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 20 ஓவர் ‘லீக்’ போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை ஐ.பி.எல் உரிமையாளர்களில் பலர் வாங்கி உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் 20 ஓவர் போட்டி அணிகளில் முதலீடு செய்து உள்ளனர்.
ஐ.பி.எல்.லில் தங்கள் அணியில் ஆடும் வீரர்களை இந்த தொடரில் விளையாட வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு 20 ஓவர் தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்நாட்டு வீரர்கள் உள்பட எந்த ஒரு இந்திய வீரரும் வேறு எந்த ‘லீக்’ போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது.
இதனால் எந்த ஒரு இந்திய வீரர்களும் வெளிநாடு 20 ஓவர் தொடர்களில் பங்கேற்க முடியாது.
அப்படி விளையாட விரும்பும் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், உறவுகளையும் முறித்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே போல வெளிநாட்டில் நடைபெறும் 20 ஓவர் லீக்கில் அணிகளின் ஆலோசகராகவும் செயல்படவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.