அழகு சிகிச்சைக்கு வந்தவருக்கு பல்லி தோல் தோற்றம்!!

காஸ்மெடிக் சர்ஜரி உலகம் முழுவதுமே பிரபலமாகிவிட்டது. பல் சீரமைப்பு தொடங்கி மூக்கு, தாடை, காது மடல் என பல சீரமைப்பு சிகிச்சைகளும் பிரபலமாகிவிட்டன. முன்பெல்லாம் நடிகைகள் மட்டுமே அதிகம் செய்துவந்த இத்தகைய காஸ்மடிக் சர்ஜரிக்கள் இப்போதெல்லாம் வாய்ப்பு, வசதி உள்ள எல்லோருக்குமே எளிதாகிவிட்டது.

அப்படி தனது இரட்டை நாடியை சீரமைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஒரு பெண். ஆனால் அதன் பக்க விளைவாக அவரது கழுத்துப் பகுதி முழுவதுமே சிவப்பு நிறத்தில் புள்ளிகள் உருவாக தற்போது அந்தப் பகுதி மட்டும் பார்ப்பதற்கு பல்லி தோல் போல் ஆகிவிட்டது.

யார் அந்தப் பெண்?

பிரிட்டனைச் சேர்ந்த 59 வயதுப் பெண் ஜேன் போமேன். இவர் ஃபைப்ரோப்ளாஸ்ட் ப்ளாஸ்மா என்ற தோல் தொங்குவதை கெட்டிப்படுத்தும் சிகிசையை மேற்கொண்டார். இது அறுவை சிகிச்சை அல்லாது செய்யக் கூடிய காஸ்மடிக் சிகிச்சை. முன்னதாக போமேன் உடல் இளைத்தார். இதனால் அவரது தாடையின் கீழ் உள்ள தோல் தொங்கியது. இது இரட்டை நாடி போன்ற தோற்றத்தை உருவாக்கியது. அந்தத் தோற்றத்தில் இருந்து விடுபட நினைத்த ஜேன் போமேன் காஸ்மடிக் சிகிச்சையை தேர்வு செய்தார். இதற்காக அவர் போடோக்ஸ் ஊசி செலுத்த முடிவு செய்தார். ஆனால் அவருக்கு நேர்ந்ததோ வேறு.

இது குறித்து அவர் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், “நான் போட்டோக்ஸ் ஊசி செலுத்திக் கொண்டு என் முகத்தோற்றத்தை சீராக்க நினைத்தேன். ஆனால் இப்போது என் நெஞ்சுப் பகுதிக்கு மேல் கழுத்துவரை நூற்றுக்கணக்கான சிவப்பு புள்ளிகள் உருவாகியுள்ளன. என்னைப் பார்த்தால் பல்லி போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. அதனால் நான் இப்போதெல்லாம் வீட்டைவிட்டு வெளியேறுவதையே நிறுத்திவிட்டேன். ஒருவேளை அவசியமாக சென்றே ஆகவேண்டும் என்ற சூழல் வந்தால் ஒரு ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு தான் செல்கிறேன். இந்த நிலைமையைப் பார்க்கும் போது தோல் தொங்கிய முகமே பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

இதற்காக நான் 500 யூரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.40,591) செலவழித்துள்ளேன். ஊசியை செலுத்திக் கொண்ட பின்னர் எனக்கு தோலில் எரிச்சல் ஏற்பட்டது. அதை விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு எரிச்சல் ஏற்பட்டது. நரகத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். நான் தெரப்பிஸ்டிடம் எனக்கு ஏற்பட்ட உபாதையை சொன்னேன். ஆனால் அவர் அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இப்போது நான் என் வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த ப்யூட்டிசனும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். நான் பணத்துக்காக வழக்குப்போடவில்லை.

எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளேன். அழகு சிகிச்சைக்கு சென்ற எனக்கு கசாப்புக் கடையில் சிதைக்கப்பட்டது போல் ஆகியுள்ளேன்” என்று வருத்தம் தெரிவித்தார்.

போட்டோக்ஸ் ஊசி என்றால் என்ன?

முகத்தில் தோல் சுருங்கி விடுவதால் வயதான தோற்றம் ஏற்படுகிறது. அதே போல சிலருக்கு கண் புருவம், வாய், உதடு உள்ளிட்ட உறுப்புகளின் வடிவங்கள் மாறி இருக்கும். இதற்கு முகத்தில் உள்ள தசைகளே முக்கிய காரணம். போடாக்ஸ் ஊசி மூலம் தோல்களின் சுருக்கத்தை நீக்கி, இழந்த இளமையை திரும்பப் பெறலாம்.

தமிழகத்தில் கூட ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போட்டோக்ஸ் ஊசி இலவசமாக செலுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசியை ரூ.20,000 பெற்றுக் கொண்டு செலுத்துகின்றனர். உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை நோய், மார்பகங்கள் சிறிதாக இருப்பவர்களுக்கு அதனை பெரிதாக்குவது போன்ற சிகிச்சைக்காக போட்டோக்ஸ் ஊசி போடப்படுகிறது.

Leave a Reply