அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு… கோட்டையில் சுதந்திர தின கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….
75-வது சுதந்திரத் திருநாளையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் பின்னர் சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தில் இருந்து இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை இன்று நாம் கொண்டாடி வருகிறோம். எண்ணற்ற தியாகிகளின் பங்களிப்பால் நாம் சுதந்திரத்தை கொண்டாடி வருகிறோம். 1947ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பண்டிதர் நேரு ஒரு சிறப்பு மிக்க உரையை ஆற்றினார்.
அப்போது தான் இந்த மூவர்ண கொடி தேசிய கொடியாக மாறியது. விடுதலை இந்தியாவின் முதல் கொடியை ஒரு பெண்மணி தான் கொடுத்தார். மூவர்ண கொடியின் முன் அணிவகுத்து நிற்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னுடைய விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு எனது வீர வணக்கம் – எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்த கருணாநிதியை நினைவு கூர்கிறேன்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்களின் வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ₹10,000 ஆக உயர்த்தப்படும். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை இன்று முதல் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும் என்றார்.அத்துடன் தொடர்ந்து பேசிய அவர் , “மகிழ்ச்சியான அறிவிப்பை இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன்.
ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்”என்று அறிவித்துள்ளார்.