இருசக்கர வாகனங்களை திருடிய அரசு பள்ளி ஆசிரியர் கைது… 10 வாகனங்கள் பறிமுதல்….

உடுமலையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையாமுத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடுமலை கச்சேரி வீதியில் உள்ள உணவகத்தின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது வாகனம் மாயமாகி இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன், இதுகுறித்து உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, வாகன திருட்டில் ஈடுபட்டவர் உடுமலையை சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் செந்தில் குமார்(42) என்பது தெரிய வந்தது. 

இதனை அடுத்து, ஓவிய ஆசிரியர் செந்தில்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலரது இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது.  

மேலும்,அவர்  திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருடி கைதானதும், இதனால் கடந்த ஓராண்டு காலமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஸ்ப்லெண்டர் வகை இருசக்கர வாகனங்களை மட்டும் திருடி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

Leave a Reply