ஊழல் முறைகேடு பற்றி கேள்வி எழுப்பியவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…பரபரப்பு …
கரூரில் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற நிதி மற்றும் ஊழல் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பிய நபரின் காலில் விழுந்த வட்டார வளர்ச்சி அலுவலரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடந்தூர் கிராம ஊராட்சியில் இன்று ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது கோடந்தூர் ஊராட்சியில் நடந்த நிதி மற்றும் ஊழல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்ததோடு, ஊராட்சியின் துணைத் தலைவர் தங்கராஜ் ஊழல் குறித்து கேள்வி கேட்டவரை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்த பொழுது க.பரமத்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேது பொதுமக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், தவறு செய்ததாக கேள்வி எழுப்பப்பட்ட கோடந்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்காக, வட்டார வளர்ச்சி அலுவலர் எதற்காக காலில் விழ வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி கலைந்து சென்றனர்.