துப்பாக்கியால் சுடப்பட்டபோது தெரியாத வலி தற்போது எந்த உதவிகளும் கிடைக்காத போது வலிக்கிறது…95 வயது சுதந்திர போராட்ட தியாகியின் கண்ணீர்…

திருச்சி:

மதுரை மாவட்டம், குன்றத்தூரில் அய்யனார் நாயுடு – தங்கரம்மாள் தம்பதியினரின் கடைசிப் பிள்ளையாக 1928இல் பிறந்தவர், தியாகி சுந்தரம். சில ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு சில காரணங்களால் குடும்பத்துடன் மணப்பாறைக்கு குடி பெயர்ந்த இவர் தனது மாமா வீடான காரைக்குடியில் படித்துள்ளார்.

சிறுவயதில் காங்கிரஸ் கூட்டம் என்று ‘தண்டோரா’ போட்டதைக்கேட்டு, ஸ்லேட்டு புத்தகத்தை கீழே போட்டுவிட்டு கூட்டத்திற்குப்போய், ‘வெள்ளையனே வெளியேறு’ என வீர முழக்கம் இட்டுள்ளார்.

இதுகுறித்து தியாகி சுந்தரம் கூறுகையில், ‘ என் சிறுவயதில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அங்கு மேடையில் வைக்கப்பட்டிருந்த காந்தி, வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டத் தலைவர்களின் புகைப்படங்களை அங்கிருந்த சிப்பாய்கள் கீழே போட்டு மிதித்து, தூக்கி எறிந்தார்கள். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க விரட்டியபோது நான் தப்பி ஓடினேன், அப்போது என்னை சுட்டு விட்டார்கள்.

அதன்பிறகு முதலுதவி செய்து தேவகோட்டை சிறைக்கு கொண்டுபோய், அங்கு என் தொடையிலிருந்த குண்டை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள்ளே சாப்பாட்டில் விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய் ஊற்றி அதை சாப்பிடச்சொல்லி, சிப்பாய்கள் வற்புறுத்தி ’எங்கடா சுதந்திரம் கிடைக்குது’ என்று சொல்லி, பல்லை உடைத்து கொடுமைப்படுத்தினர்.

கீழே கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தால் குச்சியால் அடித்து, துப்பாக்கியை எடுத்து நீட்டி ’என்னடா சுதந்திரம்’ என சொல்லி சாதத்தை மூஞ்சியிலேயே அடித்தனர். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம். ஆனால், தனக்கு வீடு கட்ட நிதி வேண்டும்; தனது மகனுக்கு அரசு வேலை வேண்டும் என கடந்த ஆண்டு முதலமைச்சரிடம் மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை.

ஏழைகள் வந்தால் என்னை உடனடியாக பார்க்கலாம் என்று சொன்னார், முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால், நான் தலைமைச்செயலகம் போனபோது காவல்துறையினர் என்னைப் பிடித்து வெளியே தள்ளுகின்றனர். மூன்று மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் என அனைவரிடமும் பலமுறை மனு கொடுத்தும் இன்றுவரை எந்தப்பலனும் இல்லை.

மேலும் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை அனைத்து மக்களும் கொண்டாடும் விதமாக அனைவரும் வீடுகளில் மூன்று நாட்களுக்கு தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது’ என்று கூறினார்.

சொந்த வீடு இல்லாத நிலையிலும் கூட, வீடு இருந்த காலி இடத்தில் தேசியக்கொடியை பறக்கவிட்டு, தனது சுதந்திர தாகத்தை 95 வயதிலும் குறைத்துக்கொள்ளாத சுதந்திரப்போராட்டத்தியாகி சுந்தரத்தின் வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு புரியவா போகின்றது .!

Leave a Reply