இளைய தலைமுறை ஏற்றம் பெற எளிய “தியானப் பயிற்சி”

சர்வதேச இளைஞர் தினத்தன்று இளைய தலைமுறையினரின் மன இறுக்கத்தை வெற்றிகரமாக நெகிழச் செய்வதற்கான எளிய தியான பயிற்சி கோயமுத்தூர் யோகதா சத்சங்க தியான கேந்திரத்தால் சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வினை யோகதா சத்சங்க தியான கேந்திர தலைவர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். அவர் தனது தலைமை உரையில் யோகதா சத்சங்க ஆன்மீக அனுபூதி பாடங்கள் சமீபத்தில் தமிழிலும் வெளிவந்துள்ளன. அவற்றை பயன்படுத்திப் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

பள்ளி முதல்வர் வெங்கடேசன் திம்மையா தனது வரவேற்புரையில் மாணவர்களின் மனநலனுக்கு தியானம் நலம் பல பயப்பதால் இதுபோன்ற நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.

யோகதா சத்சங்க தியான கேந்திர உறுப்பினர் அலைபாயும் மனதினை அமைதி அடையச் செய்யவும், மனதை ஒருமுகப்படுத்தவும் எளியதொரு மூச்சு ஓட்டத்தினை கவனிக்கும் பயிற்சியை வழிநடத்திக் கற்பித்தார் . பக்தியோடு இறைவனைப் பாடி அழைப்பது எப்படி என்ற பயிற்சியும் வழங்கப் பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரமஹம்ச யோகானந்தர் எழுதிய வெற்றியின் விதிமுறை என்ற குறுநூல் வழங்கப்பட்டது. இளைய தலைமுறையினர் ஏற்றம் பெறவும், உலகில் ஆன்மீக நெறி தழைக்கவும் மகான் யோகானந்தர் ஆற்றிய பணிகள் ஒரு படக்காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

பள்ளி நூலகத்திற்கு யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூல் வழங்கப்பட்டது.மனதை அடக்கி சும்மா இருப்பது கடினம் என்றாலும், மூச்சு ஒடுங்க மனம் ஒடுங்கும் என்ற உண்மையை மாணவ,மாணவிகள் உணர்ந்ததாகப் பங்கேற்ற அனைவரும் கருத்து பகிர்ந்தனர்.

மேலும் இது போன்ற மன அழுத்த நீக்க பயிற்சிகள் பாடங்களைக் கருத்துடன் கவனிக்கவும், எதிர்மறை எண்ணங்களைத் களையவும் உதவுவதால் அடிக்கடி ஏற்பாடு செய்யப்பட்டால் நலம் பயக்கும் என்றனர்.

நிகழ்வினை மாணவி ஹேஸ்மா ஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி மோனிகா ஸ்ரீ தனது நன்றி உரையில் இது போன்ற நிகழ்வுகள் இளைய தலைமுறையை நெறியல்லா நெறி சாராது, நல்வழிப்படுத்தி, அவர்களது வாழ்வை நலமுறச் செய்யும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் 400 மாணவ மாணவிகள் பங்கேற்றுப் பயன் பெற்றனர். கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகையைச் சேர்ந்த யோகா சத் சங்க உறுப்பினர்கள் நிகழ்வு சிறக்க உதவினார்கள்.

Leave a Reply