”தொண்டர்களின் இயக்கத்தை” பிளவுபடுத்த யார் நினைத்தாலும் முடியாது: ஓபிஎஸ்!

ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின்படி, அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் எதுவும் தனித்தனியாக நடத்தப்படக்கூடாது என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவை கூட்ட ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் தானாகவே ரத்தாகிவிட்டது.

இதனால், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள் தானாகவே ரத்தாகிவிட்டது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது அனைத்தும் தானாகவே செல்லாத நிலைக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தொண்டர்களின் இயக்கத்தை பிளவுபடுத்த யார் நினைத்தாலும் முடியாது. தொண்டர்கள் என்ன நினைத்தார்களோ அதுவே இன்று நடந்துள்ளது.

அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றம் வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அனைவரையும் அரவணைத்து செல்வதே தலைமை பண்பு. எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் விமர்சனத்தை தாங்கி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply