தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் வெற்றி நீடிக்குமா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் வெற்றி நீடிக்குமா?

ராஜ்கோட்:
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டித்தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2- வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3- வது ஆட்டத்தில் இந்தியா 48 ரன்னில் வெற்றி பெற்றது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை ( 17-ந் தேதி ) நடக்கிறது. முதல் 2 போட்டியில் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் முக்கியமான 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.

இந்திய அணியின் வெற்றி நாளைய ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய வீரர்களுக்கு உள்ளது. கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கும், பந்து வீச்சும் நன்றாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.

இதேபோல சுழற்பந்து வீரர்கள் யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல் ஆகியோர் இயல்பான நிலைக்கு திரும்பினார்கள். கடந்த 3 ஆட்டத்திலும் வீரர்கள் தேர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநிலை நாளைய ஆட்டத்திலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி நாளைய போட்டியில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் அந்த அணி கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு சிறப்பாக ஆட முயற்சிக்கும். இரு அணிகளும் நாளை மோதுவது 19-வது 20 ஓவர் போட்டியாகும்.

இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 10-ல், தென் ஆப்பிரிக்கா 8-ல் வெற்றி பெற்றுள்ளன. நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: