கோவையில் கட்டுமான தொழிலாளர்கள் உள்பட 3,694 பேருக்கு நலத்திட்ட உதவி அமைச்சர்கள் கே.என்.நேரு, சி.வி.கணேசன் வழங்கினர்

கோவையில் கட்டுமான தொழிலாளர்கள் உள்பட 3,694 பேருக்கு நலத்திட்ட உதவி அமைச்சர்கள் கே.என்.நேரு, சி.வி.கணேசன் வழங்கினர்

கோவை,

கோவையில் கட்டுமான தொழிலாளர்கள் உள்பட 3694 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினார்கள்.

பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது தெரிவித்ததாவது,

முதலமைச்சர் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.

குறிப்பாக நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 6ஆம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை ரூ.20,000-மாக உயர்வு, கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை உயர்வு, விபத்தால் மரணத்திற்கு 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்வு போன்ற எண்ணற்ற உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் உதவித்தொகை

அத்துடன் முதலமைச்சரிடம், நல வாரியம் மூலம் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குடியிருக்க வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டுகோள் விடுத்தபோது, அதனை உடனடியாக ஏற்று 10,000- வீடுகள் முதற்கட்டமாக கட்டிட உத்தரவிட்டுள்ளார்கள்.

கடந்த 10ஆண்டுகளாக 75,000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது முதலமைச்சரின் உத்தரவின்படி, வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த தொழிலாளர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு 15 நாட்களில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு 50,000 நபர்களின் கணக்குகளில் 24 மணிநேரத்தில் உடனடியாக உதவித் தொகைகள் வழங்கப்பட்டது.

4 லட்சம் தொழிலாளர்கள் பயன்

அடுத்த கட்டமாக மீதமுள்ள 57,000 நபர்களுக்கு உதவித்தொகை திட்டங்களும் தேடிச் சென்று வழங்கப்பட்டது. முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கையால் 25 நாட்களில் 1,07000 தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. சட்டமன்றத்தில் அறிவித்தப்படி, 4,06,000 தொழிலாளர்களுக்கு அனைத்து வகையிலான நலத்திட்ட உதவித் தொகைகளை வழங்கிய அரசு நம்முடைய அரசுதான்.

கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து என்னிடம் அல்லது வாரியத்தலைவரின் கவனத்திற்கு கொண்டுவந்தால் அதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்க இந்த அரசு தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிகழ்ச்சியில் 3230 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 464 பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை, இயற்கை மரண நிவாரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 3,694 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சுமார் ரூ.13.82 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

கூடுதல் உறுப்பினர்கள் சேர்ப்பு

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்ததாவது,

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 32 லட்சம் உறுப்பினர்கள் கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் இருந்த நிலையில் 10 ஆண்டுகளில் 13 லட்சம் உறுப்பினர்களாக குறைந்துள்ளது.

இந்நிலையினை மாற்றிட முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில் கடந்த ஓராண்டுகளில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் மட்டும் 6 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, பிற வாரியங்களில் சேர்த்து 13 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அண்ணா வழியில் முதல்வர்

அதுபோலவே, கட்டுமானத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இறப்பு நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், ரூ.5000 வழங்கப்பட்டு வந்த திருமண உதவிதொகை ரூ.20000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பிற்கு மேல் வழங்கப்பட்டு வந்த கல்வி ஊக்கத்தொகை கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது 6ஆம் வகுப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று எல்லா திட்டங்களுக்கும் வழங்கப்படும் உதவிதொகை இரட்டிப்பு ஆனதுடன், கட்டுமானத்தொழிலாளர்களின் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகி உள்ளது.

“வீடுகட்டும் தொழிலாளி வீதியில் உறங்குகிறான்” என்று, அண்ணா கூறியதை முதலமைச்சர் நினைவு கூர்ந்து, கட்டுமானத்தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கி வருகிறார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களால்தான், 12 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் உறுப்பினர்களாக ஈர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சிறந்த தொழில் பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழும் என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார், கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா, நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், துணை மேயர் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் ஆர்.செந்தில்குமாரி, மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுசுவாமி மற்றும் அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: