“கிருஷ்ண ஜெயந்தி” வரலாறு..!!

“கிருஷ்ண ஜெயந்தி” வரலாறு..!!

ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) அல்லது கோகுலாஷ்டமி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி (ஆவணி 3) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

வீடுகளுக்கு வந்து அருள்பாலிக்கும் கிருஷ்ணர்

கடவுள் கிருஷ்ணர் கண்ணன், முகுந்தன், பார்த்தசாரதி, கோவிந்தன், கோவர்தன், வேணு கோபாலன் என பல பெயர்களால் பக்தர்களால் மனமுருகி அழைக்கப்படுகிறார்.

கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தி. பக்தர்களின் வீடுகளுக்கு கிருஷ்ணர் வந்து அருள்பாலிப்பதே இந்த நன்னாளின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் ராச லீலா என்றும் தஹி அண்டி (தயிர்க் கலசம்) என்றும் கோலகலமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

வழிபாட்டு நேரம், செய்ய வேண்டியவை

 தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி(Gokulashtami), ஜென்மாஷ்டமி(Krishna Janmashtami) என கிருஷ்ண ஜெயந்தி அழைக்கப்படும் நிலையில், மாலை வேளைகளில் இங்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் நடு இரவில் பிறந்ததாகக் கருதப்படும் கிருஷ்ணரின் பாதங்க வீட்டுக்குள் பூஜையறை வரை அரிசி மாவால் பதிந்து அவரை வரவேற்கும் விதமாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

மேலும் கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து, கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணெய், அவல் ஆகியவற்றையும், சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைத்து வழிபடலாம். இவற்றை முடிந்த அளவுக்கு மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால்  ஆலிழை கண்ணன் அடியெடுத்து வைத்து வீடுகளுக்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

புராணத்தில் கிருஷ்ணர்

கடவுள் மகாவிஷ்ணுவின் 8ஆவது அவதாரம் கிருஷ்ணர் அவதாரம் ஆகும். அரக்கர்களை வதம் செய்வதற்காகவும் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்கவுமே கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது.

மதுரா நகரில் வசுதேவர் – தேவகிக்கு எட்டாவது மகனாக கிருஷ்ணர் அவதரித்தார். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டார். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.

கிருஷ்ணர் தன் இளம் வயதில் குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் வெண்ணெய் திருடி உண்டு, பிருந்தாவனத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம் வந்தார்.

கிருஷ்ணா உபதேசம்

கிருஷ்ணர் பிருந்தாவனப் பெண்களின் மனதில் குடிகொண்டு ராதையுடன் காதல் புரிந்தார். பாமா, ருக்மணியை மணமுடித்தார்.

மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு துணையாக இருந்து அர்ஜூனனுக்கு தேரோட்டியாக போர்க்களத்தில் வந்த கண்ணன் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.

குழந்தைகளுக்கு வேடம்

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியன்று தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கண்ணன், ராதைபோல வேடமிட்டு மக்கள் மகிழவும் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் செய்கின்றனர்.

வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த விழாவை அஷ்டமி ரோகிணி என அழைக்கின்றனர்.

Leave a Reply