போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மெடிக்கல் ஷாப் உரிமையாளரை கத்தியால் குத்திய 3 இளைஞர்கள்….. கோவையில் பயங்கரம் ….

கோவை சிங்காநல்லூர்  எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி பகுதியில், மெடிக்கல் கடை நடத்தி வருபவர் மோகன்குமார்.  இவர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு வியாபாரம் முடிந்து, கடையை பூட்டிவிட்டு புறப்பட முயன்றுள்ளார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் கும்பல், மயக்கம் கொடுக்கும் போதை மாத்திரைகளை கேட்டுள்ளனர். அப்போது, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி மாத்திரைகள் தர முடியாது என மோகன்குமார் மறுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், மோகன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களில் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மோகன்குமாரை வெட்டியுள்ளார்.

இதில் கையில் அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தாக்குதல் சம்பவத்தின்போது மோகன்குமாரிடம் செல்போனில் பேசிய படி இருந்த அவரது மனைவி, இதுகுறித்து உடனடியாக உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் அவர்கள் விரைந்து சென்று காயமடைந்த மோகன்குமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மோகன்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போதை மாத்திரைகள் தர மறுத்ததால் மெடிக்கல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply