கஞ்சா விற்பனை செய்த பாட்டி …. 25 கிலோ கஞ்சாவுடன் கைது…போலீசார் திகைப்பு …..

தருமபுரி மாவட்டம் கடகத்துர் அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்திவந்து, விற்பனை செய்வதாக, தருமபுரி டிஎஸ்பி வினோத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில்,  தருமபுரி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் நவாஸ், உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார், பூசாரிப்பட்டி கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் சாக்குப்பையுடன் நின்றிருந்த மூதாட்டியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் சாக்கு பையில் விற்பனைக்காக ஏராளமான கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மூதாட்டியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அவர் சேலம் மாவட்டம் மேச்சேரி செட்டிகரையூரை சேர்ந்த முருகன் மனைவி பூங்கொடி(65) என்பது தெரியவந்தது. மேலும், இவரது மகன் சந்தோஷ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த வாரம் மேச்சேரி போலீசார், அவரை கைது செய்ததும், மகனுக்கு உதவியாக இருந்த பூங்கொடியிடம், கஞ்சா கடத்தல் கும்பல் நேற்று 25 கிலோ கஞ்சாவை கொடுத்தபோது, போலீசாரிடம் பிடிபட்டது தெரிய வந்தது.

அத்துடன், பூங்கொடி மீது கஞ்சா விற்பனை தொடர்பாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், குண்டர் சட்டத்தில் கைதான அவர் சமீபத்தில் வெளியே வந்த நிலையில், மீண்டும் கஞ்சா விற்னையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பூங்கொடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply