மஞ்சணத்தி பழம் தொண்டை புண்ணுக்கு முக்கிய மருந்தாக அமையுமா ?

மஞ்சணத்தி பழம் தொண்டை புண்ணுக்கு முக்கிய மருந்தாக அமையுமா ?

ஏராளமான மூலிகை மருந்துச் செடிகள், மரங்கள் நம்முடைய இடங்களில் அதிகம் காணப்படுகிறது. அப்படி மிகவும் மருத்துவ குணமிக்க மூலிகை சிறு மரம் நுணா. இது ஆங்கிலத்தில் மொரிண்டா டிங்க்டோரியா (Morinda tinctoria) என அழைக்கப்படுகிறது. இது மஞ்சணத்தி, மஞ்சள் நாறி இன்னும் பல கிராமப்பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த மரம் தணக்க மரம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த மரத்தின் விதைகள் மூலமாக புதிய மரங்கள் வளர்கிறது. இந்த மரம் சுமார் 15 அடி உயரம் வரைக்கும் வளரக்கூடியது. இது தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட மரம். சுரஞ்சி என்ற பெயரில் விற்கப்படும் மொரிண்டோன் சாயத்தை தயாரிப்பதற்காக இந்த மரம் இந்தியாவில் பரவலாக பயிரிடப்படுகிறது.

மொரிண்டோன் சிவப்பு, சாக்லேட் அல்லது ஊதா நிறங்களில் பருத்தி, பட்டு மற்றும் கம்பளிக்கு சாயமிட பயன்படுகிறது.

இந்த சாயத்தை தயாரிக்க பயன்படும் வண்ணப் பொருள் முக்கியமாக வேர் பட்டைகளில் காணப்படுகிறது. முற்காலத்தில் கைகளால் உபயோகப்படுத்தப்பட்ட கலப்பை இந்த மரத்தால் செய்யப்பட்டது.

இந்த மரத்தில் கட்டில் செய்யப்படுகிறது. இந்த கட்டிலில் தூங்கும் பொழுது நல்ல சுகமான தூக்கம் கிடைக்கும். இந்த மரத்தின் உட்பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனால் மஞ்சணத்தி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மஞ்சணத்தி பழங்கள் சாப்பிட கூடியவை. இந்த மஞ்சணத்தி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது.

நம்முடைய உடலின் வெப்பத்தை குறைக்கிறது, உடலில் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைக்கிறது, இரைப்பை நோயை நீக்குகிறது, குடல் பிரச்சனைகளை தீர்க்கிறது, பசியை அதிகப்படுத்துகிறது, தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கிறது.

கிராமப்புறங்களில் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு குழந்தைகளுக்கு இது மருந்தாக கொடுக்கப்பட்டுள்ளது. மஞ்சணத்தி இலை சாறோடு துளசி, கரிசிலாங்கண்ணி, மிளகு, இஞ்சி இலைகளை கலந்து சாறு தயாரித்து வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

உடலில் வெளிப்புறங்களில் ஏற்படும் காயங்கள், தசைப்பிடிப்பு, உடல் வலி ஆகியவற்றிற்கு இந்த இலைகளை அரைத்து பேஸ்டாக தயாரித்து அந்த இடங்களில் நன்றாக போடும் பொழுது இந்த பிரச்சனைகள் குணமாகும்.

மஞ்சணத்தி பழம் தொண்டை புண்ணுக்கு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

நொச்சி, உத்தமணி, பொடுதலை இலை சாற்றுடன் மஞ்சணத்தி இலைச்சாறும் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் எல்லா வகையான இரைப்பை பிரச்சனைகளும் முற்றிலும் நீங்கும். இது சளி மற்றும் காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடியது.

மஞ்சனத்தி பட்டையை அரை தேக்கரண்டி ஜீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி அளவு காலை மற்றும் இரவு உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் காய்ச்சலை தடுத்து வயிறு சம்பந்தமான எல்லா நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டது.

மஞ்சணத்தியின் இலை மற்றும் பழம் மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

சிறிது மிளகுத்தூள் மற்றும் சீரகத்தை பொடித்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கூடவே இந்த மஞ்சணத்தி இலை மற்றும் பழத்தின் விழுதுகளை சேர்த்து கொதிக்க வைத்து 50 மில்லி வீதம் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதிக ரத்தப்போக்கு பிரச்சனைகள் நீங்கும்.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான அளவில் வைத்திருக்க இதை குடித்து வரலாம்.

பல் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்க மஞ்சணத்தியின் பழுக்காத பழத்தையும், உப்பையும் சம அளவு சேர்த்து கெட்டியாக அரைத்து அதை பற்பொடியாக பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தினால் எந்தவித பிரச்சனைகளும் வராது.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு அந்தப் பிரச்சனை தீர மஞ்சணத்தி வேரை எடுத்து கஷாயம் செய்து குடிக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் குறையும்.

உடலில் கொப்புளங்கள் மற்றும் தோல் பிரச்சனைகள் இருப்பவர்கள் ஒரு கிலோ மஞ்சணத்தி பட்டையை அரைத்து அதை நான்கு மடங்கு தண்ணீர் சேர்த்து கலக்கி இந்த கலவை எட்டில் ஒரு பங்காக மாறும் வரை கொதிக்க வைக்கவேண்டும்.

இதனுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு மற்றும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து இதை நன்றாக கொதிக்கவைத்து சுண்டக் காய்ச்சி எடுக்க வேண்டும். குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உடலிலும் தலையிலும் இதைத் தடவி குளித்து வரும்பொழுது உடலில் ஏற்படக்கூடிய கொப்புளங்கள் தோலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குணமாகும்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: