எடப்பாடி மீது கொலை வழக்கு பதிவு செய்யுங்கள் … கலெக்டரிடம் புகார் மனு..

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால்  உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை அப்போதையை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளில் 36 கட்ட விசாரணை செய்யப்பட்டு சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்  சமர்ப்பித்துள்ளது. 

அந்த அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அந்த நேரத்தில் பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி எஸ்.பி., மகேந்திரன், உதவி எஸ்.பி லிங்கத் திருமாறன், மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஏழு காவலர்கள் இவர்கள்தான் கலவரத்திற்குப் பொறுப்பு என அந்த அறிக்கையில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில்,   மக்கள் அதிகாரம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை திமுக அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் , ஸ்டெர்லைட் ஆலையை மூட  சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்  துப்பாக்கி சூட்டின் போது முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிச்சாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction