‘ராம்குமார் கழுத்தை அறுத்தது யார் தெரியுமா ? பகீர் கிளப்பிய திருமாவளவன் எம்பி….

கடந்த 2016-ம் ஆண்டு ஸ்வாதி என்ற இளம்பெண் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது கொலையைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அக்கொலையை ராம்குமார் என்ற 24 வயது இளைஞர்தான் செய்தார் எனத் தெரிவித்தனர்.

ஸ்வாதியை ராம்குமார் நீண்ட நாட்களாகப் பின்தொடர்ந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் அவரை கொலை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் உள்ள ராம்குமாரின் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவ்வாறு கைதுசெய்யப்பட்டபோது ராம்குமாரே அவரது கழுத்தை அறுத்துக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராம்குமாரின் கழுத்தில் வலது பக்கத்தில் ஆழமாக அறுக்கப்பட்ட வெட்டுக் காயம் ஒன்றும், இடது பக்கம் லேசாக அறுக்கப்பட்ட வெட்டுக்காயமும் இருப்பதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவித்தன.

அதன் பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சடலமாகக் கொண்டு வரப்பட்டார்.

அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்வாதியை ராம்குமார்தான் கொலை செய்தார் என நீதிமன்றத்தில் நிரூபணம் ஆவதற்கு முன்பே ராம்குமார் மரணமடைந்தார்

இந்நிலையில் ஸ்வாதி கொலை வழக்கு குறித்து ஆங்கில பத்திரிகையான கேரவானில் வந்துள்ள ‘புளு மர்டர்’ என்று தலைப்பிட்ட செய்திக் கட்டுரையில் திருமாவளவனின் பேட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் ராம்குமார் கைதானபோது அவரது கழுத்தில் ஏற்பட்ட காயம் குறித்து திருமாவளவன் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். “வலது கை பழக்கமுள்ள ஒருவர் தனது கழுத்தை வலது பக்கம் அறுத்துக்கொள்வது என்பது மிக மிக அரிதாக நடக்கும் ஒன்று.” எனத் தெரிவித்துள்ளார்.

“வலது கை பழக்கமுடைய எவரும் தன் கழுத்தையும், குரல்வளையும் அறுக்கும்போது இடமிருந்து வலமாக அறுப்பதற்கான வாய்ப்புதான் உண்டு என்பதை தர்க்கரீதியாக விஷயங்களை அணுகும் எவரும் புரிந்துகொள்ளலாம்.” எனவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்திருக்கவேண்டும் என அவர் நம்புவதாக அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் கிரிமினாலஜியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். மேலும் முழு நேர அரசியலில் நுழைவதற்கு முன்பாக தமிழக அரசின் தடயவியல் துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply