போகர் உருவாக்கிய நவபாஷாண பழனியாண்டவர் – நோய் தீர்க்கும் பிரசாதங்கள்!!

போகர் உருவாக்கிய நவபாஷாண பழனியாண்டவர் – நோய் தீர்க்கும் பிரசாதங்கள்!!

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சிதிலமடைந்து விட்ட நிலையில், 5000 ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியரின் சீடரான போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பழநியாண்டவர் விக்ரகமும், மலைக்கோவிலும் இன்னும் அப்படியே இருப்பதற்கு எல்லாம் வல்ல சித்தர்களின் மகிமை தான் முக்கிய காரணம். தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்த விபூதியும் சந்தனமும் தீர்த்தமும் நோய்களை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது.

கலியுக வரதன் என்று போற்றப்படும் முருகப் பெருமானின் மூன்றாவது படைவீடாக விளங்கும் பழநியாண்டவர் திருக்கோவிலை, திருஆவினன்குடி என்றும், சித்தன் வாழ்வு என்றும் பக்தர்கள் பயபக்தியுடன் அழைக்கின்றனர். முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்கிரி வைகாசி விசாகத்திற்கும், இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கும் புகழ்பெற்றதோ, அதே போல், தை பூசத்திற்கு பெயர் பெற்றது திருஆவினன்குடி எனப்படும் பழநி மலை.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளைப் பற்றிய பெருமைகளை சொல்கின்ற, நக்கீரர் அருளிய திருமுருகாற்றப் படையிலும் பழநியாண்டவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். திருமுருகாற்றுப்படைக்கு உரைநடை எழுதிய நச்சினார்க்கினியர் சித்தன் வாழ்வு என்று பழநியாண்டவரை அழைத்துள்ளார். பழநி மலைப் பகுதியானது, சேரன் செங்குட்டுவனின் வழித்தோன்றலில் வந்த, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வையாவி கோப்பெரும் பேகன் ஆட்சி செய்த பகுதியாகும். ஆவியர் குலத் தோன்றலில் வந்த பேகனின் தலைநகராக இந்த பகுதி இருந்ததால், இதற்கு ஆவினன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.

பழனி சிவபெருமானின் சாபம் நீங்க சூரியன் வழிபட்ட தலம். சிவபெருமானுக்கு தெரியாமல், தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் தண்டனை பெற்ற அக்னியும் வாயு பகவானும், வழிபட்ட தலம். திருமகளான மஹாலட்சுமி, திருமாலை அடைய வழிபட்ட தலம். காமதேனு தன்னுடைய பாவங்கள் தீர வழிபட்ட தலம் என பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் தான் இத்தலத்திற்கு திரு-லட்சுமி, ஆ-காமதேனு, இனன்-சூரியன், கு-பூமி, டி-அக்னி, வாயு என அனைவரும் தவமிருந்து தங்களுடைய பழைய பலதை பெற்றதால் தான் இத்தலத்திற்கு திருஆவினன்குடி என்று பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

சிலை செய்த போகர் அகத்தியர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக்கவி சிங்கநாவலர், பகழிக்கூத்தர். பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்களும், முனிவர்களும் பாடிய திருத்தலம். இவை அனைத்திற்கும் மேலாக அகத்தியரின் நேரடி சீடரான போகர் சித்தர் ஜீவ சமாதியடைந்த தலமும் இந்த பழநி மலை தான். பழநி மலையில் அமையப்பெற்றுள்ள மூலவரான பழநியாண்டவரின் நவபாஷாண சிலையை உருவாக்கியர் போகர் சித்தர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

போகருக்கு அருளிய முருகன் போகர் சித்தர் தன்னுடைய தவ வலிமையால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் என அட்டமா சித்தி எனப்படும் எட்டு ஆற்றல்களையும் பெற்றவர். அதோடு, மந்திரம், மருத்துவம், மெய்யுணர்வு, ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கியவர். போகர் சித்தர் பழநி மலையில் தவம் செய்யும்போது, முருகப் பெருமான் அவருக்கு காட்சி தந்து என்னை விக்ரகமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய்து வா என்று கூறி மறைந்தார்.

போகர் ஜீவ சமாதி

முருகனின் கட்டளைப் படியே, ஒன்பது கிரகங்களின் மருத்துவ குணங்களை கொண்ட ஒன்பது விதமான பாஷாணங்களையும் கலவையாக்கி முருகனின் மூல விக்ரகமான தண்டாயுதபாணி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். போகர் சித்தர் இந்த சிலையை செய்து முடிக்க 9 ஆண்டுகள் ஆகியுள்ளது. இன்றைக்கும் பழநி மலைக் கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் போகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.

தோஷம் நீக்கும் முருகன்

போகர் சித்தர் நவக்கிரகங்களில் பூமிகாரகனான செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்பப் பெற்றவர். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரையும், பழநியாண்டவரையும் வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி இன்புற வாழ்வார்கள். அதோடு, வீடு, நிலம் இல்லாதவர்கள் பழநி முருகனையும், போகர் சித்தரையும் வழிபட்டால் சீக்கிரமே அந்த பாக்கியம் கிட்டும். திருமணத் தடையுள்ளவர்கள் பழநியாண்டவரை வழிபட்டால் வெகு சீக்கிரத்தில் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியமும் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்களும் தீரும்.

மருத்துவ குணம்

முருகனின் மூல விக்ரகம் நவபாஷாணத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், விக்ரகத்தை நாம் பார்த்தாலே போதும், அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிரிவீச்சு, நம்முடைய கண்களின் வழியே உடம்பின் உள்ளுக்குள் படிந்து, நமக்கு நலம் உண்டாகும். நவபாஷாண சிலையின் மேல் பட்டு வழியும் எந்த பொருளாக இருந்தாலும் அதற்கும் மருத்துவ குணம் ஏற்பட்டு தீராத வியாதியையும் போக்கும் சக்தி கிடைக்கும்.

நோய் நீக்கும் பிரசாதம்

பழநி தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு தினசரி நல்லெண்ணெய், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் என நான்கு விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவற்றில், சந்தனம், பன்னீர் தவிர்த்து மற்ற மூன்றும் தண்டாயுதபாணியின் சிரசின் மேல் வைத்து உடனேயே அகற்றப்பட்டுவிடும். முழுமையான அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இதில், விபூதி போகர் சித்தரின் உத்தரவால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. விபூதி பிரசாதம் கிடைப்பது புண்ணியமாகும்.

அபிஷேக தீர்த்தம்

ஒரு நாளைக்கு தண்டாயுதபாணியான பழநியாண்டவருக்கு 6 முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற கோவில்களில் உள்ளது போல் அபிஷேகம் முடிந்த பின்பு மாலை மாற்றுவது அல்லது பூக்களால் அபிஷேகம் செய்யும் நடைமுறை பழநியாண்டவர் கோவிலில் இல்லை. நவபாஷான சிலையான பழநியாண்டவர் எப்போதும் தகிப்புடன் இருப்பதால், இரவில் மட்டும், முருகனின் மார்பில் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது. விக்ரகம் எப்போதும் சூடாக இருக்கும் என்பதால், இரவில் விக்ரகத்தில் இருந்து நீர் வெளிப்படும். அந்த சூடான நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து, காலையில் அபிஷேகம் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

அருள் தரும் சிலை

ஒன்பது வகையான பாஷாணம் என்னும் மூலிகைகளால் உருவாக்கப்பட்டதால், அந்த விக்ரகத்தை சுற்றிலும் எப்போதும் ஒருவித நறுமணம் சூழ்ந்திருக்கும். அந்த நறுமணத்தை வேறு எங்கும் அனுபவிக்க முடியாது என்பது ஆச்சரியம்.
கல்லால் வடிக்கப்பெற்ற எத்தனையோ கோவில்கள் சிதிலமடைந்து காணப்படும் நிலையில், நவபாஷாணத்தில் செய்யப்பட்ட பழநி தண்டாயுதபாணி கோவிலும், சிலையும் இன்னும் புதுப்பொலிவுடன் இருப்பதற்கு, போகர் சித்தரின் மகிமை தான் காரணம் என்று பக்தர்கள் மெய்சிலிர்க்கின்றனர்.

போகர் பூஜை

பழநி மலையில் இரண்டு மரகத லிங்கங்கள் உள்ளன. ஒன்று தண்டாயுதபாணி சந்நிதியிலும், மற்றொன்று போகர் சித்தரின் சமாதியின் மீது உள்ளது. இந்த இரண்டு மரகத லிங்கத்தையும் போகர் பூஜை செய்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: