29-ந்தேதி சித்தி, புத்தி தெய்வங்களுடன் விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி உப்பூரில் அமைந்துள்ளது வெயிலுகந்த விநாயகர் கோவில். இங்குள்ள விநாயகரை புராணத்தில் ராமர் பூஜை செய்து வழிபாடு நடத்தியதாக கூறப்படும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 31-ந் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகின்றது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு கோவிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.

இதனைதொடர்ந்து இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 29-ந் தேதி மாலை 4 மணி அளவில் சித்தி, புத்தி தெய்வங்களுடன் விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 30-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் கடைசி நாள் முக்கிய நிகழ்ச்சியாக விநாயகர் சதுர்த்தியன்று கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மற்றும் உப்பூர் கிருஷ்ணன் மண்டகப்படியாரின் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் உப்பூர், கடலூர் கிராமத்தினர், தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், உப்பூர் காந்தி, குமரய்யா, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பாலன், அரிராம், கணேசன், நாகநேந்தல் விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சதுர்த்தி விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் திருவாடானை சரக பொறுப்பாளர் பாண்டியன், கோவில் உதவியாளர் தேவதாஸ் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply