3 நாடுகள் கடும் போட்டி: ஆசிய கோப்பைக்கு !!

மஸ்கட்:

15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சார்ஜா ஆகிய 2 இடங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும்.

ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஓமனில் உள்ள மஸ்கட்டில் கடந்த 20-ந் தேதி தொடங்கியது.இன்றுடன் தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைகிறது.

இதில் ஆங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடத்தை பிடிக்கும் அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் 4 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்று இரவு நடைபெறும் கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் குவைத்-சிங்கப்பூர், ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிங்கப்பூர் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்து விட்டது. இதனால் ஆங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகிய 3 அணிகள் கடும் போட்டியில் உள்ளன.

இதில் ஆங்காங் 4 புள்ளிகளுடன் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத்தலா 2 புள்ளியுடன் உள்ளன. ஆங்காங் அணி ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தினால் தகுதி பெறும்.

இன்றைய ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் அணிகள் வெற்றி பெற்றால் 3 நாடுகளும் 4 புள்ளிகளுடன் சம நிலையை அடையும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தேர்வு பெறும். இன்று இரவு முடிவு தெரிய வரும்.

Leave a Reply