சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி: செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை …….

சென்னை:

சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது.

சென்னை ஓபன் டபிள்யு. டி.ஏ. 250 பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. இதன் தகுதி சுற்று போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11-ந்தேதிகளில் நடக்கிறது.

தமிழக அரசு ஆதரவுடன் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடியினரும் பங்கேற்கிறார்கள்.

இந்த போட்டியின் முதல் நிலை வீராங்கனையாக பிரான்சை சேர்ந்த கரோலின் கார்சியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது உலக தரவரிசை பட்டியலில் 17-வது இடத்தில் இருக்கிறார். கார்சியா சமீபத்தில் நடந்த சின்சினாட்டி ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தார்.

அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க் சென்னை ஓபன் மகளிர் போட்டியில் 2-வது வரிசையில் இருக்கிறார். அவர் உலக தரவரிசையில் தற்போது 29-வது இடத்தில் உள்ளார். இது தவிர பெல்ஜியத்தை சேர்ந்த முன்னணி வீராங்கனையான எலிஸ் மெர்டன்சும் பங்கேற்கிறார். அவர் உலக தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் அங்கீதா ரானா, கனடாவின் யுஜின் பவுச்சர்ட் ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தகுதி சுற்றில் விளையாடாமல் நேரடியாக முதன்மை சுற்றில் விளையாடுவார்கள்.

முன்னாள் 5-வது வரிசை வீராங்கனையான பவுச்சர்ட் 2014-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷர்மதா, ரியா பாட்டியா ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.

ஒற்றையர் பிரிவில் பட்டம் பெறுபவருக்கு ரூ.26.50 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.15.77 லட்சமும், இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறும் ஜோடிக்கு ரூ.9.58 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் ஜோடிக்கு ரூ.5.38 லட்சமும் பரிசு தொகை வழங்கப்படும்.

இந்தப் போட்டிக்கு டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 7 நாட்களுக்கான சீசன் டிக்கெட்டின் விலை ரூ.1000, ரூ. 2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

12-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையிலான நாட்களுக்கு தினசரி கட்டணம் ரூ.100, ரூ.200, ரூ.300 எனவும், கடைசி 3 தினங்களுக்கு அதாவது செப்டம்பர் 16 முதல் 18 வரையிலான நாட்களுக்கு தினசரி கட்டணம் ரூ.200, ரூ.400, ரூ.600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

போட்டிகள் தினசரி மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு வரை மின்னொளியில் நடைபெறும்.

Leave a Reply