9 ஆம் ஆத்மி எம்எல்ஏ-கள காணோம்… அரவிந்த் கேஜ்ரிவால் அதிர்ச்சி ..

டெல்லி  மாநிலத்தின் ஆம் ஆத்மி  கட்சியின் எம்எல்ஏக்களை “கவர” பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகள் விவாதப் பொருளாகியுள்ளது. பாஜகவின் இந்த முயற்சி குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கூடினார்கள்.

மொத்தம் 62 எம்எல்ஏக்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் 53  பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். மீதமுள்ள 9 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த கூட்டத்திற்கு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 

இதற்கிடையில், கட்சி மாறுவதாகக் கூறப்படும் எம்எல்ஏக்களை அணுகியதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்களை வெளியிடுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி சவால் விடுத்துள்ளது. டெல்லி அரசின் மதுபான ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்ப கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டுகிறது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை புதன்கிழமை வெளியிட்ட ஆவணத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply