மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…விசாரணை முடிவில் போலீஸ் அதிர்ச்சி …

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் ஒருவர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு முதல் அமைச்சர் வீட்டில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போன் செய்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்ததில், சென்னை நகரில் உள்ள நபரின் முகவரி கிடைத்தது. அங்கு சென்று விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், சிறுவன் புவனேஸ் என்று கண்டறியப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்து வருவதும் அங்கு பணியாற்றக்கூடிய அன்பழகன் என்பவருடைய செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்ததும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோன்று பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் புவனேஸ் மீது காவல்நிலையங்களில் 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply