எதுக்குமே என்ன கூப்பிட மாட்டீங்களா ? நான் சுயமரியாதைக்காரன் … அதிகாரிகளை விளாசிய திமுக எம்பி.. பரபரப்பு …

சேலம்:

சேலத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கு தான் அழைக்கப்படுவது இல்லை என்று சேலம் திமுக எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் போர்க்கொடி தூக்கி உள்ளார். சேலத்தில் சமீபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூர மங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, இ கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த இந்த வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிதான் தற்போது திமுக எம்பி எஸ்.ஆர் பார்த்திபனுக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது.

மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்து ராஜ் தலைமையில் இந்த வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 2160 பேருக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா பெரிதாக நடத்தப்பட்டது. உள்ளூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் 994 நபர்களுக்கு இதில் வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. அதேபோல் சுய உதவிக்குழு சார்பாக தூய்மை பணி செய்யும் 1166 பேருக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் சேலம் எம்பி எஸ். ஆர் பார்த்திபன் மட்டும் அழைக்கப்படவில்லை. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபோல் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந் திரன் எம்எல்ஏ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். துணை மேயர் சாரதா தேவியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கவுன்சிலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆனால் சேலத்தில் எம்பியாக இருக்கும் எஸ்.ஆர் பார்த்திபனுக்கு இதற்கான அழைப்பு செல்லவில்லை. எம்எல்ஏ, மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இதன் காரணமாக திமுக எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

மாநகராட்சி சார்பாக நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பியான எனக்கு அழைப்பு தரப்படுவது இல்லை என்று எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் புகார் அளித்துள்ளார். அவரின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுயமரியாதை என் உயிருக்கு மேலானது‌. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால்,அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள்,கழகத்தோழர்கள்,நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்.

என்னை புறக்கணிப்பது,எனக்கு வாக்களித்து 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று ! இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் !!, என்று எஸ்.ஆர் பார்த்திபன் தனது ட்விட்டர் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction