இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை விவசாயமே தீர்வு – ஈஷா விவசாய கருத்தரங்கில் திரு.பாமயன் அறிவுரை

“இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இயற்கை விவசாயமே தீர்வாக இருக்கிறது” என ஈஷா விவசாய கருத்தரங்கில் பிரபல வேளாண் வல்லுநர் திரு. பாமயன் கூறினார்.

திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இன்று(ஆகஸ்ட் 28) நடைபெற்ற மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் திரு.பாமயன் அவர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

“விவசாயம் செய்வதற்கு மண் வளம் என்பது மிகவும் அவசியம். உலகளவில் மண்ணை ஒரு ஜடப்பொருளாக பார்க்கின்றனர். ஆனால், நம் நாட்டில் அதை உயிருள்ள பொருளாக பார்க்கிறோம்.

அதில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களால் தான் பயிர்கள் விளைகின்றன. ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் அந்த நுண்ணுயிர்கள் உயிரிழந்து மண் வளம் இழக்கிறது. மேலும், வளம் இழந்த மண்ணில் விளையும் விளைப் பொருட்களில் போதிய சத்தும் இருக்காது.

இதனால், ஏராளமான நோய்களும் வருகின்றன. இயற்கையையும் நம் ஆரோக்கியத்தையும் காப்பதற்கு இயற்கை விவசாயமே தீர்வாக இருக்கும்.

குறிப்பாக, பாரம்பரிய நெல் ரகங்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அவற்றை உட்கொள்வதன் மூலம் நம்முடைய ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமின்றி, நெல் ரகங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதே சத்துடன் கொண்டு செல்லும் திறன் பாரம்பரிய நெல் ரகங்களுக்கே உள்ளது. எனவே, அவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியம்” என்றார்.

பூச்சி மேலாண்மை குறித்து பேசிய பூச்சியியல் வல்லுநர் திரு.பூச்சி செல்வம், “நெல் விவசாயம் மட்டுமின்றி அனைத்து வகையான விவசாயத்திலும் பூச்சி மேலாண்மை என்பது மிகவும் அவசியம். பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சி, தீமை செய்யும் பூச்சி என இரண்டு வகைகள் உள்ளது. பயிர்களை சேதப்படுத்தி அதை உணவாக உட்கொள்ளும் பூச்சிகளை தீமை செய்யும் பூச்சிகள் எனவும், அந்த பூச்சிகளையே உணவாக உட்கொள்ளும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகள் எனவும் அழைக்கிறோம்.

சில குறிப்பிட்ட பயிர்கள் மற்றும் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகம் ஈர்க்க முடியும். அந்தப் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளை உட்கொண்டு பயிர்கள் சேதம் அடைவதை தடுக்கும். இதனால், பூச்சி கொல்லிகளை பயன்படுத்தாமல் நாம் பயிர்களை சாகுபடி செய்ய முடியும். இதனால், உற்பத்தி செலவு குறைவதோடு மட்டுமின்றி, நெல் மற்றும் காய்கறிகளில் விஷத் தன்மை இன்றி சத்தாக விளைவிக்க முடியும்.

இதை விவசாயிகள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ள ஈஷா விவசாயம் இயக்கம் சார்பில் ‘பூச்சிகளை கவனிங்க’ என்ற பெயரில் நடத்தப்படும் இரண்டு நாள் களப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்” என கூறினார்.

கால் கிலோ விதை நெல்லில் 4 டன் மகசூல் எடுத்து சாதனை படைத்த முன்னோடி விவசாயி திரு.ஆலங்குடி பெருமாள் அவர்கள் ஒற்றை நாற்று நடவு முறையின் நன்மைகள் குறித்து விரிவாக பேசினார்.

அவர் கூறுகையில், “பொதுவாக பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 30 கிலோ விதை நெல்லை பயன்படுத்துகின்றனர். ஆனால், நான் கடைப்பிடிக்கும் ஒற்றை நாற்று நடவு முறையில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப வெறும் கால் கிலோவில் இருந்து 5 கிலோ வரை விதை நெல்லே போதுமானது. இதனால், விதை நெல்லின் செலவு குறைகிறது. மேலும், இடைவெளி விட்டு நடுவதால், நெல் மணிகள் அதிகம் தூர் பிடித்து மகசூல் அதிகரிக்கும்.

வழக்கமான முறையில் ஏக்கருக்கு 2 டன் மகசூல் எடுத்தால், என்னுடைய முறையில் 3 முதல் 4 டன் வரை மகசூல் எடுக்க முடியும். மேலும், எலி தொல்லை இருக்காது. இயற்கை பேரிடரின் போது நெற்பயிர்கள் காற்றில் சாய்ந்து சேதமடையாது. களை செலவும் ஆட்கள் பயன்பாடும் குறைவாக இருக்கும். இதனால், செலவை குறைத்து வரவை அதிகப்படுத்த முடியும். ஏக்கருக்கு கிட்டத்தட்ட 3 மடங்கு கூடுதல் லாபம் பார்க்க முடியும்” என ஆலோசனை வழங்கினார்.

இது தவிர, பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணம் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்து திரு. கோ. சித்தர் அவர்களும், பாரம்பரிய நெல்லில் மறைந்திருக்கும் அறிவியல் உண்மைகள் குறித்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் திரு. மணிமாறன் அவர்களும் பேசினார்கள். நெல் சாகுபடி செய்வதில் பின்பற்ற வேண்டிய நுட்பங்கள் குறித்து திரு. சரவணன் அவர்களும், வேளாண் காடு வளர்ப்பு முறை குறித்து திரு. தமிழ்மாறன் அவர்களும் உரை ஆற்றினர். நெல்லுக்கு உகந்த இடுப்பொருட்கள் மற்றும் கால்நடை இல்லாத இயற்கை விவசாயம் குறித்து திரு.பிரபாகரன் பேசினார்.

முன்னதாக, கருத்தரங்கின் தொடக்க விழா நிகழ்வில் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியின் நிர்வாக பொது மேலாளர் திருமதி. ஸ்ரீதேவி, கல்லூரியின் இயக்குநர் திரு.மால் முருகன், தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் திரு. நல்லசாமி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

Leave a Reply