புன்னை நல்லூரில் அருள்செய்யும் அம்மனின் பெருமைகளைக் காண்போம் வாருங்கள்!!

புற்று வடிவமாகவே தோன்றிய சுயம்பு வடிவம் கொண்டவள் புன்னைநல்லூர் மாரியம்மன்.

அவளை வணங்கி புற்றுமண் பிரசாதத்தை பெற்று பிரார்த்தித்தால் வேண்டியன யாவுமே நிறைவேறும் என்பது சத்தியமான ஒரு நம்பிக்கை. புன்னைவனக்காடாக இருந்த புன்னை நல்லூரில் அருள்செய்யும் அம்மனின் பெருமைகளைக் காண்போம் வாருங்கள்.

 1. தஞ்சையை அடுத்த புறநகர்ப் பகுதியாக உள்ளது புன்னைநல்லூர். இந்த திருத்தலத்தில் அம்பாள் மாரியம்மனாக புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருளாட்சி செய்கிறாள்.
 2. அம்மன் புற்று வடிவத்தினள் என்பதால் இங்கு அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக தைலக்காப்பு செய்யப்படுகிறது. அம்மனுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடக்கிறது.

3.அம்மை கண்டு அவதிப்படும் பக்தர்கள், கண் வியாதிகள் கொண்டவர்கள் இங்கு வந்து தங்கி குணம் அடைந்து செல்கிறார்கள்.

 1. சோழமன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரை காவல் தெய்வமாக வைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் உருவாக்கப்பட்ட தேவியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று ‘சோழசம்பு’ நூல் கூறுகிறது. அதுவே பின்னர் புற்று வடிவாக பிற்காலத்தில் தோன்றியது என்கிறார்கள்.

5.தஞ்சாவூரை ஆண்ட அரசர்களுக்கும் ஆங்கிலேயே அதிகாரிகளுக்கும் பல சித்து விளையாட்டுகளை நிகழ்த்தி அவர்களின் குறை தீர்த்து அருள் செய்தவள் இந்த அம்மன்.

 1. சதாசிவ பிரம்மேந்திரர் உருவாக்கிய அம்மன்தான் இன்று வழிபாடு செய்யும் தெய்வசிலையாக உருவாகி உள்ளது என்கிறார்கள். சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, சந்தனம், குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கோரோஜனை, அகில், பலவித மூலிகை மருந்துகள் கொண்டு புற்று மண்ணில் பிசைந்து உருவானது என்று தலவரலாறு சொல்கிறது. பிரமேந்திரரே இங்குள்ள ஸ்ரீசக்ரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.
 2. கோடைப்பருவங்களில் முகம் வியர்க்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் இன்றுவரை அதிசயமாக பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இன்றும் அம்மனின் திருமுகத்தினை அர்ச்சகர் துடைத்து அதில் உள்ள ஈரத்தை பக்தர்களுக்கு காண்பிக்கிறார். இதனால் அன்னை முத்து மாரியம்மன் என்றும் போற்றப்படுகிறாள்.

8.ஆடி மாத பல்லாக்கு திருவிழா இங்கு சிறப்பானது. ஆடி மாத கடைசி ஞாயிறு அன்று இந்த திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரமாண்ட முத்துப்பல்லக்கில் அம்மன் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.

 1. அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ஆலயத்தின் நடை திறந்திருக்கும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 3 மணிமுதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்பது சிறப்பு.
 2. சரபோஜி மன்னர் இந்த அம்மனின் பக்தர். அதனால் இந்த ஆலயத்தின் கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் போன்றவற்றை கட்டி திருப்பணி செய்தார். மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3-வது திருச்சுற்று மதிலைக் கட்டினார் என்கிறார்கள். ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் என்பவர் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபம் ஆகியவற்றைக் கட்டினார் எனப்படுகிறது. ஆங்கிலேயே அதிகாரிகள் பலரும் இந்த அம்மனுக்கு காணிக்கையாக பல அணிகலன்களை அளித்துள்ளனர்.
 3. தஞ்சை சமஸ்தானத்துக்கு உரிய இந்த ஆலயத்தில் விநாயகர், முருகர், காத்தவராயர், அய்யனார், பேச்சியம்மன், லாட சன்னாசி, மதுரை வீரன் உள்ளிட்ட சந்நிதிகளும் சுற்றுப்பிரகாரத்தில் காணப்படுகிறது.
 4. எல்லா நோய்களும் தீர இங்கு மாவிளக்கு எடுக்கப்படுகிறது. உப்பு, மிளகு இடுவதும், அக்கினி சட்டி எடுப்பதும், வேப்பஞ்சேலை உடுத்துவதும் இங்கு சிறப்பான வழிபாடாக நடக்கிறது.
 5. அம்மனின் தீர்த்தமாக இங்கு வெல்லக்குளம் இருந்து வருகிறது. வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள் இந்த குளத்தில் வெல்லம் வாங்கி போடுவது நடக்கிறது.

14.அம்மனின் ஆலயத்தின் உள்ளே உள்ள உள்தொட்டி, வெளித்தொட்டி ஆகிய இரண்டு தொட்டிகளிலும் பக்தர்களால் நீர் நிரப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீர் நிரப்பினால் அம்மனின் உஷ்ணம் குறையும் என்பது நம்பிக்கை.

 1. தோல் நோய், சொறி, சிரங்கு வந்தவர்கள், வயிற்று வலி, கட்டிகள் வந்து அவதிப்படுபவர் என சகலரும் இங்கு வந்து விரதம் இருந்து புற்று மண்ணை பிரசாதமாகக் கொண்டு நோய் தீர்க்கிறார்கள் என்பது இந்த தலத்தின் பெருமைகளில் ஒன்று.

Leave a Reply