நாகராஜா கோவிலில் பலர் கைக் குழந்தைகளோடு வந்து சாமி தரிசனம் !!

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இ்ந்த கோவில் நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவது விசேஷமாகும். இதனால் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான கடந்த 21-ந் தேதி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகைதந்தனர். 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இது கடந்த வாரத்தை விட அதிகம்.

கோவிலின் உள்புறத்தில் இருந்து பிரதான வாயிலுக்கு வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள்.

கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாகவும், பலர் கைக்குழந்தைகளோடும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். இதனால் நேற்று மதியம் நடை சாத்துவது தாமதம் ஆனது. சிறப்பு அர்ச்சனை டிக்கெட்டுகளும் கடந்த வாரத்தை விட நேற்று அதிக அளவில் விற்பனையானதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சமயத்தில் பக்தர்கள் வசதிக்காக அவர்களுக்கு தேவையான பால் பாக்கெட், மஞ்சள் பொடி, பூ, பழம், தேங்காய் தட்டு உள்ளிட்டவை கோவில் வளாகத்துக்குள்ளேயே விற்பனை செய்யப்பட்டது. பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் நாகராஜா திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவில் வளாகத்தில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. போலீசார் சீருடையிலும், மாற்று உடையிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேசும், தி.மு.க.வினரும் உடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction