ஆவணி மாத விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் – விசேஷ தினங்கள்!!

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த மாதத்தில் தான் கணநாதர், கண்ணபிரான் திருஅவதாரங்கள் நடைபெற்றன. மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தில் சிறப்பு.

அரசர்களில் சிறந்தவரான மகாபலி மன்னன், வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான்.

சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர். இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை சாதிப்பார்.

அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இது சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.

ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள்.

அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது.

ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது.

இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதெல்லாம் நம்பிக்கை. அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டு இன்பமுற்று வாழ்வோம்.

Leave a Reply