போலீஸ் வேலை பார்த்த உங்களுக்கு மொய் விருந்து பற்றி என்ன தெரியும்..? திமுக எம்எல்ஏ-வுக்கு ஆதரவாக அண்ணாமலையை சாடிய டிடிவி…

சென்னை;

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் தனது பேரப் பிள்ளைகளுக்கு காது குத்து விழா என்ற பெயரில் 8,000 பேருக்கு 100 ஆடுகள் வெட்டி மொய் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் வசூல் ஆனதாக தகவல் வெளியானது, மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மொய் விருந்தில் வசூலான தொகை பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில்தான் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் வறுமையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்வில் வழிதேடும் கடைசி வாய்ப்பாக மொய் விருந்து நடத்துவது வழக்கம், ஆனால் திமுக எம்எல்ஏ தனது சுயலாபத்திற்காக இதை நடத்தியுள்ளார்.

குறிப்பாக கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற ஒரே கல்லில் ஐந்தாறு மாங்காய்களை அடித்துள்ளார், திமுகவின் விஞ்ஞான ஊழல் திறமையில் தலைமையையே விஞ்சக் கூடிய வித்தையை காட்டியிருக்கிறார் அசோக்குமார் என்றும் அண்ணாமலை காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்தான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதுக்கோட்டையில் நடக்கும் மொய் விருந்தை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார், வட்டியில்லா கடன் தருவதுதான் மொய் விருந்து, ஒருவரை கை தூக்கி விடுவது தான் மொய் விருந்து, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை செய்த அண்ணாமலைக்கு மொய் விருந்து பற்றி எதுவும் தெரியாது என அவர் கூறியுள்ளார். 

Leave a Reply