நீதிமன்றமும் ,நீதிபதிகளோட வீடுகளும் கூட தான் நீர்நிலை புறம்போக்கில் இருக்குது….அதை இடிக்க யார் உத்தரவு போடறது ?? கே.பாலகிருஷ்ணன் கேள்வி.

நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள விடுகளை  இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும்,   நீதிமன்றங்களும் நீதிபதி குடியிருப்பும் நீர்நிலை புறம்போக்கில் தான் உள்ளது என்றும்  அதை யார் கேட்பது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவுகளை விளக்கும்   சிறப்பு பேரவை கூட்டம்  கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில்  அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி உள்ளவர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும்,  அந்த வீடுகளை இடிக்க வேண்டும் என்றும்  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதி குடியிருப்புகளே  நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளது. இவற்றை இடிக்க யார் உத்தரவு போடுவார்கள். நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்கிறதா? இதுபோன்ற போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதே நிலை நீடித்தால் நீதிமன்றங்களை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும். நாடாளுமன்றத்தின் நிலை குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்சார சட்டம் 2022 நிறைவேற்றக்கூடாது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் மின்சாரத் துறை தனியாரிடம் சென்று விடும்.  மேலும் தமிழ்நாட்டிலுள்ள 22 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் பாதிக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது ரத்தாகும்.  அதுமட்டுமின்றி  தனியார் சொல்லும் மின் கட்டணத்தை  செலுத்தி ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும். இந்த மின்சார சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு இயக்கத்தை உருவாக்க உள்ளது” என்று தெரிவித்தார்.  

Leave a Reply