பெரியவர் முதல் குழந்தைகள் வரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி!!

வேண்டியதை எல்லாம் அளிப்பவர் விநாயகர். தடைகளை நீக்குபவர். அறிவாற்றலை குறிக்கும் கடவுள் விநாயகர். அவரை வழி படுவது மிகவும் எளிமையானது. மஞ்சள் அல்லது சாணத்தை பிடித்து வைத்து வழிபடலாம்.

எங்கும் நிறைந்த்திருக்கும் அருகம் புல் மற்றும் எருக்கம் பூ அவருக்கு விருப்பமான இலை மற்றும் பூவாகும். எப்போது வேண்டுமானாலும் விநாயகரை வணங்கலாம். மூன்று தெருக்கள் கூடும் இடத்தில் விநாயர் காணப்படுவார். விநாயகர் அரச மரத்தடிகளில் காணப்படுவார்.

வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அரசமரம் மரங்களிலே மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளிப்படுத்தக்கூடிய மரம். அந்த மரத்தடியில் இருக்கும் விநாயகரை வணங்கும் போது நமக்கு நிறைய பிராணவாயு கிடைத்து மனமும் உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது.

ஒவ்வொரு மாதம் சதுர்த்தி திதி அதாவது அமாவாசை பௌர்ணமியை அடுத்து வரும் நான்காம் நாள் அன்று விநாயகரை வணங்குவது சிறப்பு. ஆவணி மாதம் வளர் பிறை சதுர்த்தி விநாயகர் பிறந்த தினம். ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா 3-10 நாட்கள் கொண்டாடப்படும்

விழா என்றாலே பிள்ளைகளுக்கு கொண்டாட்டம். காரணம் விடுமுறை, புத்தாடை மற்றும் வகை வகையான இனிப்பு உணவுகள். விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் குளித்து விட்டு, புத்தாடை அணிந்து கோலம் போட்ட ஒரு மனையை எடுத்துக் கொண்டு விநாயகர் சிலை வாங்க கடை வீதிக்கு செல்வார்கள். உடன் குழந்தைகளும் புத்தாடையில் மகிழ்ச்சியோடு செல்வார்கள்.

விநாயகர் சிலையோடு எருக்கம் பூ மாலை, குடை, கண்மணி, கொய்யாப்பழம் மற்றும் அருகம் புல் வாங்கிவருவார்கள். வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ய துவங்குவார்கள். வீட்டில் உள்ள பெண்கள் விநாயகர் சதுர்த்தி அன்று படைக்க வேண்டிய உணவுகளான அப்பம், கொழுக்கட்டை, அவல், பொரி, சக்கரை பொங்கல், சுண்டல், இவற்றை சமைப்பார்கள்.

நல்ல நேரம் பார்த்து பூஜையை துவங்குவார்கள். விநாயகரை தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும். நாம் எண்ணிய காரியம் வெற்றி அடையும். தோப்பு கரணம் போடும் போது நம் உடலில் குண்டலினி சக்தி செயல் படுவதாக சொல்லப்படுகிறது. அப்போது என்ன வேண்டுகிறோமோ அது நடக்கும் என்று சொல்கிறார்கள்.

தோப்பு கரணம் போடும் முறையை பாப்போம். கால்களை தோள்பட்டை அகலத்திற்கு வைத்துக் கொள்ளவும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்ளவும். இப்படி பிடிக்கும் போது உங்கள் கை கட்டை விரல் வெளிப்பக்கமாகவும், ஆள் காட்டி விரலை உள் பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று முறை உட்க்கார்ந்து எழவும். பின்னர் கைகளால் தலையின் பக்கவாட்டில் அதாவது காதுக்கு சற்று மேலே குட்டிக் கொள்ளவும்.

மூன்று முறை இருந்த இடத்திலேயே வலப்பக்கம் சுற்றிக் கொள்ளவும். இந்த நிலையில் நீங்கள் விநாயகரிடம் வேண்டுவது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். குழந்தைகளின் நினைவாற்றல் வளர கல்வி நன்றாக பயில நாள் தோறும் தோப்பு கரணம் போட்டு விநாயகரை வணங்குவது சிறப்பு.

விநாயகருக்கு படைக்கும் உணவுகளில் உள்ள அறிவியல் கருத்தை பாப்போம். சூரிய ஒளி மிகுதியாக இருக்கக்கூடிய பூக்களில் ஒன்று எருக்கம் பூ. அருகம்புல் சாறு இருதய நோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.

அருகம் புல் வேர் ஆழமாக செல்லக் கூடியது. அறிவு ஆழமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்க அருகம் புல் படைக்கப் படுகிறது. கொழுக்கட்டை நினைவாற்றலை வளர்க்கும் ஒரு அற்புதமான உணவாகும். குழந்தைகள் கொழுக்கட்டை உண்டு வர நினைவாற்றல் பெருகும்.

இனி சமைத்த உணவுகளையும் படைத்து, குழந்தைகள் விநாயகர் பாடலை பாட, மகிழ்ச்சியோடு விநாயகருக்கு தீபம் காட்டி வணங்க வேண்டும். பொதுவாக 3 நாட்கள் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டு பின்னர் ஓடும் நீரிலோ குளத்திலோ கரைத்து விடுவார்கள். கோயில்களில் விநாயகரை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பார்கள்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் போது அதில் மறைந்துள்ள அறிவியல் தத்துவங்களை உணர்ந்து வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction