உறவு பாராட்டுவோம் வாரீர்!

“இறைவன் நண்பர்களை உதவுவதற்காகவும், உறவினர்களை சோதிப்பதற்காகவும் வழங்கியுள்ளான்” என்பது மகான் யோகானந்தரின் வாக்கு. இவ்வுலகில் குறைவில்லா நிறைவு உடையவன் இறைவன் மட்டுமே. இவ்வுலகில் குறையில்லா மனிதர்கள் யாருமே இல்லை. எனவே குறை, நிறையுடன் மனிதர்களைக் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

மற்றவர்களிடம் உள்ளது என்னிடம் இல்லையே என்ற எண்ணம் பிறக்கையில், பொறாமை தோன்றி உறவில் விரிசல் விளைகிறது. உறவுகள் நிலைக்க வேண்டும் என்றால் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடாது. அவ்வாறு உணர்ச்சி வசப்பட்டால், உறவினர்கள் நம்மை எளிதாகப் புண்படுத்தி விடுவார்கள்.

எது கண்டும் நிலை குலையா மன நிலை இருப்பின், உறவுகள் செழிக்கும். “பிறர் நம்மை கல்லால் அடித்தாலும், சொல்லால் அடித்தாலும் அவைகளை எதிர்கொள்ள நல்லெண்ண ஏவுகணைகளை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்” என்கிறார் யோகானந்தர். உறவுகளைப் புரிந்து கொள்ள நாம் மூளை, இதயம் இரண்டையும் பயன்படுத்த வேண்டும்.
இதனால் அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் பிரச்சினைகளை அணுக இயலும்.

“தவறு இழைக்கும் உறவினர்களின் அறியாமையை சகிப்பின்மை மற்றும் பழி வாங்கும் மனப்பாங்கினால் தழைக்க செய்யக் கூடாது. மாறாக, மன்னிப்பு, பிரார்த்தனை மற்றும் அவர்களுக்காக அன்பு மேலிட்டு வடிக்கும் கண்ணீரால் உதவ உறவு மேம்படும்” என்றுள்ளார் மகான் யோகானந்தர்.

பிறரது தவறுகளை மன்னிக்கவும் வேண்டும். மறக்கவும் வேண்டும். வெறுப்பை அன்பினாலும், தீமையை தன்மையாலும் வெல்லுவதே விவேகமாகும். உறவுகளுக்கு இடையே பகைமை மறைந்து இணக்கம் ஓங்க அரியதொரு சங்கல்பத்தை யோகானந்தர் அருளியுள்ளார்.

“இறைவா! நீ இணக்கமாய் உள்ளாய். உனது இணக்கத்தை நான் பிரதிபலிப்பேனாக. பிணக்கு என்ற தவறினில் உழலும் உனது குழந்தைகளை இணக்கமுறச் செய்வாயாக!

யார் நம்மைக் கைவிட்டாலும், இறைவன் நம்மை ஒருபோதும் கை விட மாட்டான். யாவருமே நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போதும், இறைவன் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்வதில்லை. எனவே நாம் மனித அன்பிற்காக ஏங்காது, இறை அன்பினைத் தேட வேண்டும்.

இறை நேசம் பல கோடி மடங்கு மகிழ்வு தர வல்லது. இறை அன்பை நாம் பெறும்போது, உறவினர்களை மட்டும் அன்றி இறைவனின் படைப்புகள் யாவற்றையும் நேசிக்கும் மனப் பக்குவம் தானே வந்து விடும்.

தகவல்:யோகதா சத்சங்க தியான கேந்திரம்,கோயமுத்தூர். 90806 75994

Leave a Reply