போலீஸ் ஸ்டேஷன் போய் கையெழுத்து போட தினமும் பஸ்ல போக முடியல…. அதான் பைக்கை திருடினேன்… கூலாக வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி…

சென்னை: 

சென்னை மந்தைவெளி பகுதியைச்சேர்ந்த தினேஷ்(40) என்பவர், ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை நடத்தி வருகிறார். ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனம், கடந்த 14ஆம் தேதி காணாமல் போனது.

இதுதொடர்பாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த சிசிடிவி காட்சி மற்றும் மாயமான இருசக்கர வாகனத்தின் புகைப்படத்தை தனது வியாபார ரீதியிலான வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த தினேஷ், தனது வாகனம் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி கோரியிருந்தார்.

இந்த பதிவைக் கண்ட சிலர், தினேஷின் வாகனம் நெற்குன்றம் அண்ணாநகர் பகுதிகளில் தென்பட்டதாகத் தெரிவித்தனர். கடந்த 28ஆம் தேதி இரவு 11 மணியளவில், அண்ணாநகர் டவர் பார்க் அருகே தனது இருசக்கர வாகனம் இருப்பதை தெரிந்து கொண்ட தினேஷ் தனது நண்பர்களோடு சென்று, அந்த இளைஞரை கையும் களவுமாகப் பிடித்தார். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குச்சென்ற அண்ணாநகர் போலீசார், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இருசக்கர வாகனத்தைத்திருடிய இளைஞர் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி(23) என்பது தெரியவந்தது. இவர் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டு செல்வதாகவும் தெரிகிறது.

அவ்வாறு தினமும் பேருந்தில் பயணம் செய்வதால் சோர்வடைந்துவிட்டதாகவும், தினமும் பேருந்து பயணத்தில் மூன்று மணி நேரம் செலவிட வேண்டிய நிலை உள்ளதால், போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவே இருசக்கர வாகனத்தை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் திருடிய வாகனத்தை அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் சிக்கி கொள்வோம் என அறிந்து, தெருவில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்துக்குச் செல்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply