நான் யாரு ..எந்த கட்சிகாரன்னு தெரியுமா? அரசு மருத்துவமனையில் முழு போதையில் நோயாளிகளிடம் தகராறில் ஈடுபட்ட மருத்துவர்..

சேலம் ;

சேலம் மாவட்டம் ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்த செல்லன் மகன் செல்லையா (75). அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது உறவினர்கள் நேற்று இரவு 9.30 மணியளவில் ஏற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவர் செந்தில் குமார் செல்லையாவுக்கு மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். மருத்துவர் அதிகப்படியான மது போதையில் இருந்ததால் நோயாளியையும் உடன் சென்றவர்களையும் மரியாதை குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நோயாளியுடன் வந்தவர்கள் மருத்துவர் செந்தில் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் நோயாளியுடன் வந்த அவரது பேரன் கௌதம் ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து மருத்துவ மனைக்கு வந்த ஏற்காடு காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் கௌதம் காவல் துறையில் புகார் ஒன்றையும் அளித்தார்.

அந்த புகாரில் எனது தாத்தாவுக்கு அதிக காய்ச்சலின் காரணமாக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அப்போது பணியில் இருந்த மருத்துவர் இதுதான் மருத்துவமனைக்கு வரும் நேரமா உங்களுக்கு இப்போது மருத்துவம் பார்க்க முடியாது என்று எங்களை அநாகரீகமாக பேசி வெளியே தள்ளினார்.

அப்போது மருத்துவர் செந்தில் குமார் அதிகப்படியான மது போதையில் இருந்தார். எனவே காவல் துறை அந்த மருத்துவரை பரிசோதனை செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே உள்ளூரில் உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மருத்துவர் செந்தில்குமார் போதையில் நோயாளி மற்றும் அவரது உறவினர்களை பொறுக்கிகள் என்று தரைகுறைவாக பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தான் பாமகவை சேர்ந்தவர் என்றும்  தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி வீடியோ எடுத்தவரை தாக்க முயற்சிப்பதும்  வீடியோவில் பதிவாகி உள்ளது.

Leave a Reply