என் செருப்புக்கு கூட தகுதியில்லாதவர்… தமிழக அமைச்சரை ட்விட்டரில் காட்டமாக விமர்சித்த அண்ணாமலை …
சென்னை ;
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியலுக்கும் மாநிலத்திற்கும் சாபக்கேடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலைய வாயிலில் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவில் இருந்து மாவட்ட தலைவராக இருந்த சரவணன் விலகினார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
சர்ச்சை ஆடியோ தொடர்பாக விளக்கமளித்த அண்ணாமலை, திமுகவினர் ஆடியோவை எடிட் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை முன்னோர்களின் பெயரைக் கொண்டு பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனும், அவரது கூட்டமும் வாழ்வதாகவும், ஆகையால், தானாக உருவாகியிருக்கும் ஒரு விவசாயியின் மகனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பெரிய பரம்பரையில், வெள்ளிக் கரண்டியுடன் பிறந்ததைத் தவிர, இந்த ஜென்மத்தில் வேறு எதையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யவில்லை என்றும், அவர் அரசியலுக்கும், மாநிலத்திற்கும் சாபக்கேடு என்றும் அண்ணாமலை சாடியுள்ளார். மேலும், இல்லாத ஒன்றை இட்டுக்கட்டும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அளவிற்கு தரம் தாழ விரும்பவில்லை என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார். தனது செருப்புக்கு கூட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிகரில்லை என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.