முதலில் அவங்கள நிறுத்த சொல்லுங்க… அப்புறம் நான் நிறுத்துகிறேன்… ஆன் லைன் சூதாட்டம் குறித்த கேள்விக்கு ஆவேசமான சரத்குமார்….

திருச்சி ;

திருச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் தனியார்  ஹோட்டலில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவரும்,திரைப்பட நடிகருமான சரத்குமார் பங்கேற்றார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கட்சி தொடங்கப்பட்டு 15ஆண்டுகள் நிறைவடைந்து, 16 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். விலைவாசி உயர்வை கடுப்படுத்த மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் நோக்கமுடைய எளிய மனிதர்கள் யாரும் தேர்தலில் நிற்க முடியாத நிலையுள்ளது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல.  நம்நாட்டில் மாற்றம், பணமில்லாத அரசியல் உருவாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை  செய்யும் அதிகாரம் அரசிடம் உள்ளது. இணையத்தில் நல்லதும் இருக்கிறது. தீயதும் இருக்கிறது. இதில் நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள். தீயதை விட்டு விடுங்கள். ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அரசு என்ன முடிவு எடுக்கிறது. எனவே அதனை முதலில் அரசிடம் கேளுங்கள். சரத்குமார் நடிப்பது பற்றி இரண்டாவது கேளுங்க.

ஆன்லைன் ரம்மியை நிறுத்த வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் இப்போது சொல்கிறார்கள், ஆனால், இந்த  ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் சூதாட்டம் பல விதத்தில் மக்களுக்கு பாதிப்பு என முதலில் இருந்தே கூறி வருகிறோம். ஆன்லைன் வர்த்தகம் ஆன்லைன் விளம்பரத்தை கட்டுபடுத்துவது அரசுதான். எனவே, அரசு முடிவு எடுத்து ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட ஒன்று என சொன்னால், தடை செய்ததை நான் எப்படி பயன்படுத்துவேன்? தடை செய்த ஒன்றுக்கு நான் எப்படி விளம்பரப்படுத்துவேன்.

நீங்கள் தடையே செய்யவில்லையே. நீங்கள் தடை செய்யுங்கள், அது தானாக நிறுத்தப்படும். சரத்குமார்தான் எல்லாரையும் கெடுக்கிறார் என்று எப்படி சொல்வீர்கள்? ஆன்லைனில் ரம்மி ஆட்டம் மட்டும் அல்ல, கிரிக்கெட் உள்ளிட்ட எவ்வளவோ ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் உள்ளன.

அதுவும் சூதாட்டம்தான். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால்தான் இதிலிருந்து எல்லாரும் விடுபடுவார்கள். எந்த ஒரு அரசும் இளைஞர்கள் போதை பழக்கத்தில்  வீணாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. அதை தடுக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆபாச படம், சூதாட்டம், மது, புகை அனைத்தையும் தடைசெய்யுங்கள்.

போதை பொருள்கள் எப்படி தமிழகத்தில் ஊடுருகிறது என்பது தெரியவில்லை.  அதனை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்.மத்திய அரசு தனது கையில் அதிகாரத்தை குவித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலை நீடித்தால் மாநில அரசே தேவை இல்லை. 

Leave a Reply