வருகிற 8-ந்தேதி முதல் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆவணி மாத பவுர்ணமி 10-ந்தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை (8-ந்தேதி) முன்னிட்டும் வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 நாட்களில் மலைப்பகுதிகளில் மழை அறிகுறியோ, நீர்வரத்துகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் சதுரகிரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

ஆவணி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

Leave a Reply