ஜெயலலிதா வீடு எங்களுக்குத்தான் சொந்தம் …கூட இருந்தவங்க ,வந்தவங்க , போனவங்க எல்லாம் (சசிகலாவும் தான்) உரிமை கொண்டாட முடியாது…. ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ
சென்னை ;
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீடு விற்பனைக்கு உள்ளது என்றும், அந்த வீட்டை வாங்க யாரும் அவ்வளவாக முன்வரவில்லை என்றும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இதை மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட வீடு விற்பனைக்கு இல்லை. இந்த வீடு எனது பாட்டியால் கட்டப்பட்டது. அதன் பின்னர் அவர் என் அத்தை ஜெயலலிதாவிற்கு இந்த வீட்டை கொடுத்து விட்டார். நாங்கள் எங்கள் சிறுவயதில் இந்த வீட்டில் தான் வளர்ந்து இருக்கிறோம் .
ஜெயலலிதாவின் போயஸ் வீடு எங்கள் பூர்வீக சொத்து. இதை நாங்களே பராமரித்துக் கொள்வோம். வேறு யாரும் இந்த போயஸ் இல்லத்துக்கு உரிமை கோர முடியாது. எனக்கு என் அத்தை மட்டும் தான் முக்கியம்.
அவருடன் யார் இருந்தார்கள் யாரெல்லாம் வந்தார் போனார்கள் என்பது பற்றி இது கவலை இல்லை. என் அத்தை பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவருக்கு உதவி செய்ய ஆலோசனை சொல்ல ஆயிரக்கணக்கானவர்கள் உடன் இருந்திருப்பார்கள். அதற்காக அவர்கள் எல்லாம் போயஸ் தோட்ட வீட்டை உரிமை கொண்டாட முடியாது. குடும்ப உறுப்பினரும் ஆக முடியாது .
அத்தையுடன் பயணித்ததாக சொல்லும் சசிகலாவுக்கும் இது பொருந்தும். தயவு செய்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் விற்பனை என்று வதந்திகளை பரப்ப வேண்டாம். இது எங்கள் அமைதியை கெடுக்கிறது .தேவையற்ற அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.